சீனா,
காற்று மாசுபடுவதை தடுக்க உலகின் மிகப்பெரிய காற்று சுத்திகரிப்பானை அமைத்து வருகிறது சீனா.
உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில், தொழில் துறை வளர்ந்து வருகிறது.
அதே நேரத்தில் அங்கு தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக வெளியேறுகிற புகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதுமட்டுமல்லாது குளிர்காலத்தில் வீடுகளில் குளிர் காய்வதற்கு நிலக்கரி எரிப்பதால் வெளியேறுகிற புகையாலும் காற்றில் மாசு பெருகி வருகிறது. இதுவரை இல்லாத அதிக அளவிலான பனி மூட்டத்தால் அங்கு பனிப் புகை ஏற்பட்டுள்ளது.
மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன மக்கள் காற்றை விற்பனைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் 751 டி பார்க் ஆர்ட் பகுதியில் காற்று சுத்திகரிப்பான் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனை நெதர்லாந் நாட்டை சேர்ந்த டான் ரூசெகார்டி என்பவர் வடிவமைத்துள்ளார்.
இந்த காற்று சுத்தகரிப்பான் 7 மீட்டர் உயர கோபுர வடிவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த சுத்தகரிப்பானின் வேலை காற்றில் கலந்துள்ள மாசுக்களை 75 சதவீதம் அகற்றி சுத்தமான காற்றை வெளியிடும்.
மணிக்கு 30 ஆயிரம் கன மீட்டர் அளவிலான காற்றை இந்தக் கருவி சுத்திகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சுத்திகரிப்பான் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.