ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா மீது போர் தொடுக்க சீனா தயாராகி வருகிறது ஆனால் இந்திய அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில் சீனாவுடன் எல்லை பிரச்சனை தீவிரமாகி வரும் நிலையில் பாஜக தலைமையிலான மத்திய அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.

“சீனா போருக்குத் தயாராகிறது, ஆனால் மத்திய அரசு இந்த உண்மையை ஏற்கத் தயாராக இல்லை. எல்லையில் சீன ராணுவம் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில் முழு தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது.

ஆனால் நமது அரசாங்கம் அதை மறைக்கிறது. நாம் கவனமாக இருக்க வேண்டும். அரசாங்கம் வாய்வித்தையில் மட்டுமே கவனம் செலுத்துகிறது” என்று பாரத் ஜோடோ யாத்திரையின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.

“கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நான் இதைப் பற்றி பேசிவருகிறேன். சீனாவின் அச்சுறுத்தலை என்னால் மிகத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

2,000 சதுர கிலோமீட்டர் இந்திய நிலப்பரப்பை சீனா கைப்பற்றியுள்ளது அரசாங்கம் அதை மறைக்கவும் புறக்கணிக்கவும் முயற்சிக்கிறது. இந்த அச்சுறுத்தலை மறைக்கவோ புறக்கணிக்கவோ முடியாது,” என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும், “என் வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள், 2024 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜக-வை வீழ்த்தும்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

காங்கிரஸ் ஒரு கருத்தியல் கட்சி, “பாசிசத்திற்கு” எதிராக உறுதியாக நிற்கிறது என்றும் தன் மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தை பாஜக மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டினார்.