பீஜிங்

சீனாவில் உள்ள தனியார் பள்ளிகளை அதன் உரிமையாளர்கள் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

சீனாவில் அரசுப்பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகள் அதிக அளவில் உள்ளன.  இங்கு மொத்தம் 1.90 லட்சம் தனியார் பள்ளிகளுள்ளன.  இந்த பள்ளிகளில் சுமார் 5.6 கோடி பேர் பயின்று வருகின்றனர்.  இவை அனைத்தும் லாப நோக்கில் செயல்படுவதாகச் சீன அரசு கூறி வருகிறது.

அதாவது தனியார் பள்ளிகள் மொத்தம் 100 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டுவதாக அரசு தெரிவித்துள்ளது.  இதில் குறிப்பாக ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.  எனவே இந்த பள்ளிகளை லாபம் ஈட்டாத நிறுவனங்கள் என அரசு அறிவிக்க முடிவு எடுத்தது.

இதையொட்டி தனியார் பள்ளிகளின் வருமானம் 100 பில்லியன் டாலரில் இருந்து 25 பில்லியன் டாலராகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.   தற்போது சீனக் குழந்தைகளுக்கு ஆரம்ப மற்றும் நடுத்தர வகுப்பு படிப்புக்கள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  எனவே மக்கள் அதிக அளவில் இந்த பள்ளிகளை நாடுகின்றனர்.

மேலும் நகர்ப்பகுதிகளில் அதிக அளவில் தனியார் பள்ளிகள் உள்ளன. இங்கு படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் நிதி இன்மையால் அரசுப் பள்ளிகள் சரிவர இயங்குவதில்லை எனவும் இதனால் அங்குக் கல்வித் தரம் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களில் பலர் தனியார் பள்ளிகளுக்கு மாற்றப்படுவதும் நடந்து வருகிறது.

இந்நிலையில் சீன அரசு தனியார் பள்ளி உரிமையாளர்கள் தங்களது பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.   ஏற்கனவே பீஜிங்கில் கடந்த 3 மாதங்களில் சுமார் 13 தனியார் ஆரம்ப மற்றும் நடுநிலைப்  பள்ளிகளையும்  ஒரு உயர்நிலைப்பள்ளியையும் அரசுடைமை ஆக்கி உள்ளது. இதற்காக அந்த பள்ளி உரிமையாளர்களுக்கு எவ்வித இழப்பீடும் வழங்கப்படவில்லை.

தற்போது சீனாவில் அரசை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ள தனியார் பள்ளி உரிமையாளர்கள் தங்கள் பள்ளிகளை அரசிடம் ஒப்படைத்து வருகின்றனர்.