பீஜிங்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று அடுத்த ஆண்டு ஜனவரியில் அதிபராக பதவி ஏற்க உள்ள குடியரசு கட்சி வேட்பாளர் ஜோபைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்து உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றிக்குத் தேவைப்படும் 270 பிரதிநிதி வாக்குகளில், 290 பிரதிநிதிகள் வாக்குகளைப் பெற்றதையடுத்து, தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப் 214 பிரதிநிதிகள் வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.

ஜனவரி 20 ஆம் தேதி வரை ட்ரம்ப் அதிபர் பதவியில் இருப்பார். அதன் பிறகு ஜனநாயகக் கட்சியின் சார்பில் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பதவியேற்பார். இந்த அதிகார மாற்றத்தை எந்தவித இடையூறுமில்லாமல் நடத்திக் கொடுக்கவும், ஜோ பைடனுக்கு ஒத்துழைக்குமாறும் டிரம்ப்புக்கு அமெரிக்காவில் நெருக்கடி  கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பரபரப்பான சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு வெளியாகி ஒரு வாரம் ஆகும் நிலையில், இதுவரை வாழ்த்து தெரிவிக்காத சீனா, இன்று வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ”அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சட்டத்துக்கு உட்பட்டே உறுதி செய்யப்படும் என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்ததால், பிடனின் வெற்றி குறித்து கருத்து தெரிவிக்க திரு வாங் மறுத்துவிட்டதுடன், “அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளின்படி” முடிவு உறுதிப்படுத்தப்படுவதற்கு பெய்ஜிங் காத்திருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும்,  பிடனை வாழ்த்துவது திரு டிரம்பை கோபப்படுத்தக்கூடும் என்று ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் நிர்வாகம் ஆரம்பத்தில் கவலை கொண்டிருந்ததாகவும், தற்போது பைடனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு இருப்பதால், வாழ்த்துவதாகவும் தெரிவித்து உள்ளது.