நியூயார்க்: காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ இந்தியா நீக்கியது குறித்து பாதுகாப்பு சபையில் ‘மூடிய விவாதம்’ நடத்த வேண்டுமென சீனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்திற்கான தலைவராக விளங்கும் போலந்திற்கு பாகிஸ்தான் எழுதிய கடிதத்தையடுத்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது சீனா.

இந்தக் கோரிக்கை மிக சமீபத்தில்தான் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேசமயம் இதுதொடர்பாக தேதி எதுவும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் ஐ.நா. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், கவுன்சில் தலைவர் போலந்திற்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் தரப்பில், உடனடியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலைக் கூட்டி காஷ்மீர் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

சீனாவின் இந்தக் கோரிக்கை குறித்து, கவுன்சிலின் இதர உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகே, கூட்டத்திற்கான தேதி குறித்து முடிவுசெய்ய இயலும் என்று போலந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.