சென்னை:
gate மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவினை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு gate மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவினை கைவிடச்செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த காலங்களில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களின் குடும்பத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ளார்.

தற்போது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு கணிசமாக நிலம் தேவைப்படும் நிலையில் அவ்வாறு கையக்கப்படுத்தப்படும் நிலங்களின் உரிமையாளர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை எழுந்துள்ளதாகக் கூறியுள்ளார்.

எனவே அவ்வாறு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனக் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் பணிக்கு gate அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் முடிவினை கைவிட வேண்டும் எனக் வலியுறுத்தியுள்ளார்.