சென்னை: மதுரையின் பிரசித்தி பெற்ற 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் மற்றும் காளைகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தின் சார்பில் 6 கார்கள் பரிசு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முதல்வர் ஸ்டாலின், அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி சார்பில் 6 கார்கள் பரிசு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி கூறினார்.
பொங்கலையொட்டி மதுரையில் ஜனவரி 15-ல் அவனியாபுரம் ஜ, 16-ல் பாலமேடு, 17-ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. அவனியா புரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் சிறந்த காளைகளுக்கு தலா ஒரு கார், சிறந்த வீரர்களுக்கு தலா ஒரு கார் என மொத்தம் 6 கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.
முன்னதாக, மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டிகளின் முன்னேற்பாடு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், ஆட்சியர் சங்கீதா முன்னிலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், சோழவந்தான் எம்எல்ஏ ஆ.வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் இம்மாத இறுதிக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வந்து திறந்துவைக்க உள்ளார். தொடக்க விழா நடைபெறும் நாள் முதல் தொடர்ந்து 5 நாட்கள் இந்த பிரம்மாண்ட அரங்கில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அரசு சார்பில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. போட்டிகளில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ஒரு நாளாவது மதுரை ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும். இதுபோல் ஆண்டுதோறும் இந்த அரங்கில் போட்டி நடத்தப்பட உள்ளது.
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் காளைகள், காளையர்களுக்கு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் சார்பில் தலா ஒரு கார், அமைச்சர் உதயநிதி சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் பரிசாக வழங்கப்படும். மூன்று ஜல்லிக்கட்டிலும் 6 கார்கள் வழங்கப்பட உள்ளன.
15-ம் தேதி நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 2,400 காளைகளும், 1318 மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். அதுபோல், 16-ம் தேதி நடக்கும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிக்கு 3,677 காளைகளும், 1,412 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர். 17-ம் தேதி நடக்கும் உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு 6,099 காளைகளும், 1784 வீரர்ளும் முன்பதிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மூன்று போட்டிகளுக்கும் சேர்த்து 12,176 காகைளும், 4,514 வீரர்களும் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு 9, 701 காளைகளும், 5,399 வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு, காளைகளை அடக்கும் வீரர்கள் எண்ணிக்கை முன்பதிவு குறைந்தாலும் 2,475 காளைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றார்.