சென்னை:  சென்னை அடுத்த எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான ரசாயண ஆலையில் இருந்து வெளியான அம்மோனியா கசிவால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த டிசம்பர் 26ம் தேதி  அன்று இரவு எண்ணூர் பெரியக்குப்பம் பகுதியில் செயல்பட்டு  தனியார் உரத் தொழிற்சாக்கு திரவ அமோனியா கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலைக்கு அருகே உள்ள பெரியக்குப்பம், சின்னக்குப்பம், நேதாஜி நகர் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு வாந்தி, கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இது அந்த பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மாசு கட்டுப்பாட்டு துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.  நச்சு வாயுவால், பாதிக்கப்பட்ட மக்களை  சென்னை ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, எண்ணூரில் உள்ள உர ஆலை செயல்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து 7 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளது. பின்னர் ஓரிரு நாளில் ஆலை மீண்டும் வழக்கம்போல செயல்பட  தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

ஆனால், ஆலை செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அவர்களிடம் அரசு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டம் கைவிடப்பட்டது. இந்த விவகாரத்தில் திமுக அரசு தனியார் உரத்தொழிற்சாலைக்கு சாதகமாக செயல்பட்டது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  உரச்தொரிற்சாலையில் இருந்து வெளியான அமோனியா கசிவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் சுற்றுச்சுழல் துறை கூடுதல் தலைமை செயலாளர், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில்,  அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பேசி முடிவு செய்யப்பட்டு உள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளஹவு இழப்பீடு தொகை கொடுக்கப்பட வேண்டும் என்பது  தொடர்பாக ஒரு சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என சுற்றுச்சூழல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அம்மோனியா கசிவு தொடர்பாக ஆய்வு செய்த தொழில்நுட்ப குழு, ஒரு சில நாட்களில் அரசிடம் அறிக்கையை சமர்பிக்கிறது. அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது.