சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில்  அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  தொடங்கி வைத்தார். மேலும் திமுகவுடன் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் நாளை (மார்ச் 1ந்தேதி) மாநிலம் முழுவதும் திமுகவினரால் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில், மார்ச் 1 மாலை 5.00 மணி அளவில் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதில்  அகில இந்தியத் தலைவர்கள் அணிவகுக்க இருக்கிறார்கள். அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வருகை தந்து வாழ்த்த இருக்கிறார்கள்.

பிறந்தநாளையொட்டி, திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய மடலில், பேனர் போஸ்டர்போன்ற ஆடம்பரம்  வேண்டாம் என்றும்,   ஏழை – எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் விழாவை கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தநிலையில், . முதலமைச்சரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு ‘எங்கள் முதல்வன் எங்கள் பெருமை’ என்ற தலைப்பில் திமுக சார்பில்  கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திறந்த வைத்து, பார்வையிட்டார்.

புகைப்பட கண்காட்சி வருகை பதிவேட்டில் கமல்ஹாசன் எழுதும் போது மாபெரும் தலைவரின், தந்தையின் மகனாக தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும், கவலையையும் அனுபவித்து ஏற்றவர். அவரின் படிப்படியான உயர்வை படம்பிடிக்க வேண்டியது சரித்தர அவசியம் என்று எழுதினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், இரவும் பகலமாக இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் புகைப்பட கண்காட்சி நிகழ்ச்சியின் முக்கியத்துவம் உணர்ந்ததால் படப்பிடிப்பை சற்று ஒத்திவைத்துவிட்டு வந்துள்ளேன். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலைஞர் மகன் என்ற காலத்தில் இருந்தே எனக்கு தெரியும். எங்களுடைய நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை இருவரும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

மாபெரும் தலைவர் தந்தையின் மகனாக இருக்கும் சந்தோசம் நிறைய என்றாலும் சவால்களையும் ஏற்று படிப்படியாக தொண்டனாக இளைஞர் அணியின் தலைவனாக, சட்டமன்ற உறுப்பினராக மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக பதவியேற்று இன்று தமிழகத்தில் முதலமைச்சராக படிப்படியாக உயர்ந்தவர். அவரின் பொறுமையை மட்டுமல்ல திறமையையும் காட்டுகிறது.சரித்திரத்தை அடிக்கடி நினைவுபடுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. சரித்திரத்தை மாற்றி எழுத பலர் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் தமிழர்களின் சரித்திரத்தை மாற்றி எழுத பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு சவால் விடுவது போல் சரித்திரத்தை நாம் நினைவு கூற வேண்டும் அந்த நினைவு தான் இது. நல்ல செய்தி தபாலில் வரும் கெட்ட செய்தி தந்தியில் வரும் என்பார்கள். இதெல்லாம் நல்ல செய்தி தபால் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. சீன் பை சீன் ஆக தான் நகர்த்த வேண்டும். இப்போதே கிளைமாக்ஸ் சொல்ல முடியாது. . இது அதற்காக இடமும் அல்ல நேரமும் அல்ல என்று கூறினார். சீன் பை சீனாகத்தான் கதையை நகர்த்த வேண்டும். நேரடியாக கிளைமாக்ஸ்க்கு போக முடியாது. இந்த தருணத்தில் கூட்டணி பற்றி கூற முடியாது என்றும் தெரிவித்தார்.

திமுக கொள்கை உடன் ஒத்துப்போகிறீர்களா என்ற கேள்விக்கு ரொம்ப நாளா என்ற கமல்ஹாசன் முதலமைச்சருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றார்.

அப்போது உடன் இருந்த சேகர்பாபு, தயாநிதி மாறன் புரிந்தும் புரியாதது போல  சிரித்தனர்.