சென்னை:  காவல்துறையினருக்கான குதிரையேற்ற போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

41-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.12.2022) தலைமைச் செயலகத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 41-வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

மத்திய பிரதேச மாநிலம், டெக்கான்பூரில் உள்ள பிஎஸ்எப் அகாடமியில் 14.11.2022 முதல் 26.11.2022 வரை 41வது அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் மத்திய ஆயுதப்படை மற்றும் மாநில காவல்துறையைச் சேர்ந்த 18 குழுக்கள் பங்கேற்றன. இரண்டு வாரங்களாக நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சுமார் 300 குதிரைகளும், 600 ரைடர்களும் கலந்து கொண்டனர்.

இப்போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த முதுநிலை காவலர் மணிகண்டன் Mental Hazard மற்றும் Show Jumping Novice போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் லாலா பி கே டெய், சிரோகி சேலன்ஜ் கோப்பைகளையும், Show Jumping Medium Normal போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கமும், உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை காவலர்கள் மணிகண்டன், மகேஷ்வரன், சுகன்யா ஆகியோர் Quadrille போட்டியில் தங்கப் பதக்கமும்,

முதுநிலை பெண் காவலர் சுகன்யா Women Best Rider மற்றும் Mahila Constable போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், டிஜிபி அரியானா கோப்பையும், குதிரை பராமரிப்பாளர் தமிழ்மணி Farrier போட்டியில் வெண்கலப் பதக்கமும், குதிரை பராமரிப்பாளர் ராஜகணபதி Syec போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றார்கள். சென்னை காவல் குதிரைப்படையின் வரலாற்றில் முதன் முறையாக 2018-ம் ஆண்டு குதிரையேற்ற அணி (Equestrian Team) உருவாக்கப்பட்டது.

அகில இந்திய காவல்துறை குதிரையேற்ற சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு காவல்துறை குதிரையேற்ற அணி பங்கேற்பது இது மூன்றாவது முறையாகும்.  முப்பது – நாற்பது ஆண்டுகளாக இப்போட்டிகளில் கலந்து கொண்ட அணிகளை வெற்றி கொண்டு, தமிழ்நாடு காவல்துறை அணி பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 5 இலட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 3இலட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வென்ற காவல்துறை வீரர்களுக்கு 2 இலட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசின் சார்பில் பரிசுத் தொகையாக விரைவில் வழங்கப்படும்.

இந்த நிகழ்வின்போது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க. பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், காவல்துறை தலைவர் (காவல் பயிற்சி கல்லூரி) ஆ. அருண், திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சய், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.