துபாய்: துபாயில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு முதலீட்டாளர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்களிடம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார். துபாயில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்ச்சி மற்றும் புர்ஜ் கலிபாவில் ஒளிபரப்பு செய்யப்பட்ட செம்மமொழிபாடல் வைலாகி வருகிறது.

4நாட்கள் அரசு பயணமாக தனி விமானத்தில் துபாய் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு உலக வர்த்தக பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். தொடர்ந்து, துபாய் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் உரையாடியவர், இரவு உலகிலேயே அதிக உயரமான கட்டடமான துபாய் புர்ஜ் கலீஃபா கோபுரம் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அழகிய காட்சிப் படத்தினை கண்டு மகிழ்ந்தார். 

முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டோடியோவுக்கு சென்று பார்வையிட்டவர், அங்கு அவர் தயாரித்துள்ள ‘மூப்பில்லா தமிழே தாயே’ ஆல்பத்தை பார்வையிட்டு, தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை” என பாராட்டினார்.

இதையடுத்து,   இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களைசந்தித்து பேச உள்ளார். அப்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுகிறார்.

பின்னர்  இன்று மாலை துபாயில் வாழும் தமிழர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கிறார்.