சென்னை: அம்பேத்கர் 132-வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார். பின்னர் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றார்.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் தேதி இனி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில்முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார். அத்துடன் அவருடைய பிறந்தநாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘சமத்துவ நாள்’ ஆக கடைப்பிடித்து உறுதிமொழி ஏற்கவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில்,அண்ணல் அம்பேத்கரின் 132-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அம்பேத்கர் படத்திற்கு தமிழக முதல்வரும்,திமுக தலைவருமான ஸ்டாலின் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து,அம்பேத்கரின் உருவப் படத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு,பொன்முடி, மா.சுப்பிரமணியன்,சேகர்பாபு மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கள் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளனர் .இதனைத் தொடர்ந்து,ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேர்கர் சிலைக்கும், அங்கு வைக்கப்பட்ட படத்திற்கும் முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் முதல்வர் கலந்து கொண்டு “சமத்துவ நாள்” உறுதிமொழியை ஏற்றார். அவருடன் விசிக தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் அமைச்சர்கள், அதிகரிரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
உறுதிமொழியின்போது, சக மனிதர்களை சாதியின் பெயரில் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் எனவும், மாறாக அவர்களிடம் சமத்துவதை கடைபிடிப்பேன் என்றும் முதல்வர் உறுதி மொழி ஏற்றுள்ளார்.