சென்னை:  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , தமிழக ஆளுநர் பன்வாரிலாலை, ராஜ்பவன் சென்று சந்தித்து பேசினார். அப்போது, 16வது சட்டப்பேரவையை கூட்டுவது தொடர்பாக ஆளுநருடன் முதல்வர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2021-22ம் ஆண்டுக்கான பொதுபட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்யைக முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டதுடன், தடுப்பு மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறை போன்றவற்றில் தீர்வுகாணும் நடவடிக்கையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும், சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பாகவும், முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை ,ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனி செயலாளர் உதயச்சந்திரன், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் சென்றனர்.

முன்னதாக,  கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின், ஆளுநரை சந்தித்தபோது கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தார்.பின்னர் கொரோனாவிற்கு தமிழக அரசு  எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முதல்வர் ஆளுநரிடம் விளக்கி வருகிறார்.