செங்கல்பட்டு: கிழக்கு கடற்கரை சாலை நெம்மேலியில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவாட்டம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதுழ 100 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டு வருக்றது. இந்த தண்ணீரான தென்சென்னை பகுதியான திருவான்மியூர், வேளச்சேரி, சோழிங்க நல்லூர் பகுதிகளுக்கு தினமும் 80 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த 2 திட்டத்துக்கும் ரூ.1140 கோடி வரை செலவானது.
இதையடுத்துஅங்கு மேலும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. 1,259 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்துக்காக, ஜெர்மனி 700 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த ஆலை மூலம் தினமும் 150 மில்லியன் லிட்டர் கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக்கி விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை நெம்மேலி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கட்டுப்பட்டு வரும்கட்டுமான பணிகளை நேரில் ஆய்வு செய்தார். பணிகள் எப்போது முடியும் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேட்டறிந்ததுடன், பணிகளை விரைந்து முடிக்கும் படியும் அறிவுறுத்தினார்.
இந்த புதிய குடிநீர் நீர் ஆலையில் சுத்திகரிக்கப்படும் குடிநீர் தென் சென்னையில் உள்ள வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம் – புழுதிவாக்கம், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கும், சிறுசேரியில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்கா பகுதிக்கும் ராட்சத குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்பட உள்ளன.
இதன் மூலம் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.