சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விசாரணை நடத்த  நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்துக்கு செலவிடப்பட்டுள்ள தொகை  எவ்வளவு என்பது  தகவல் உரிமை பெறும் சட்டத்தின்படி தெரிய வந்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கும் எவ்வளவு செலவிடப்பட்டு உள்ளது என்பது குறித்தும் தெரிய வந்துள்ளது.

 ஒரே ஒருநபர் ஆணையத்துக்கு இதுவரை 4 கோடியே 23லட்சத்து 65ஆயிரத்து 557 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆணையம் இதுவரை 30 முறை மட்டுமே விசாரணை நடத்திய நிலையில், சுமார் நாலறை கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளிப்பதுடன், மக்களின் வரிப்பணம் எப்படியெல்லாம் வீணடிக்கப்படுகிறது என்பதற்கு ஆதாரமாக அமைந்துள்ளது.

தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த காட்டுமிராண்டிதனமான துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய அதிமுக அரசு  ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து விசாரணை நடத்தியது.  இந்த ஆணையம் இதுவரை 30 கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளது. ஆனால், அதற்கு செலவழிக்கப்பட்ட தொகையோ மலைக்க வைத்துள்ளது.

இதுதொடர்பாக நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்துக்கு இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றி  கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தகவல் ஆணையம் பதில் அளித்துள்ளது.

அதில்,  நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்துக்கு இதுவரை 4 கோடியே 23 லட்சத்து 65 ஆயிரத்து 557 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக ​தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

13 பேரின் உயிர்களை பறித்த கொடூர செயல் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதசீன் இதுவரை 30 தடவை மட்டுமே விசாரணை நடத்தி உள்ள நிலையில், அதற்காக சுமார் நாலறை கோடி ரூபாயை தமிழகஅரசு செலவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அப்பாவி மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வரிவருவாய் எவ்வாறெல்லாம் வீணடிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

அதுபோல,  ஆறுமுகசாமி கமிஷனுக்கு 3,52,78,534 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதுவரை 154 பேரிடம் விசாரித்திருக்கிறது. இந்த ஆணையத் தின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2019, ஏப்ரல் 26-ம் தேதி தடைவிதித்துள்ளதால் இதுவரை விசாரணை முழுமையடையவில்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கு செலவிடப்பட்டுள்ள சுமார் 8 கோடி ரூபாயை  பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருந்தாலே, அவர்களது வாழ்வாதாரமாவது உயர்ந்திருக்கும்.