சென்னை:  அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை; முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்  தெரிவித்து உள்ளார். இவர் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவர் தலைமையிலான அதிமுக ஆட்சியிலும் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர், அவரது  ஆட்சியின்போது, ஜெயலலிதாவுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்தது, அப்போது அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. சினிமா தயாரிப்பாளரான  ஆர்.எம்.வீரப்பன் நடிகையான ஜெயலலிதா வுக்கு பதவி வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  இருந்தாலும், எம்.ஜி.ஆர். இருவரையும் அரவணைத்து ஆட்சியையும், கட்சியையும் நடத்தி வந்தார்.

எம்.ஜி.ஆரின் மறைவின்போது, அவரது உடல் ஏற்றப்பட்ட ராணுவ வாகனத்தில் ஜெயலிதா ஏற முயன்றபோது, ஆர்.எம்.வீரப்பன் ஆதரவாளர் களால், அவர் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவமும் ஏற்பட்டது. பின்னர் எம்ஜிஆர் மனைவி ஜானகியை முதல்வராக கொண்டு வந்த ஆர்.எம்.வீரப்பன் ஜானகி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, அவரும் அதிமுகவில் இருந்து ஒதுங்கினார்.

பின்னர்,  எம்ஜிஆர் கழகம் மற்றும் கம்பன் கழகத்தின் தலைவராக இருந்து  வருகிறார். இவரது 95ஆவது பிறந்தநாள், கடந்த மாதம், செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

தற்போது, அதிமுகவின் பொன்விழா ஆண்டு தொடங்கி உள்ளது. அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையாக ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதே வேளையில் கட்சியில் இருந்து விலக்கப்பட்ட சசிகலா, தனது பங்குக்கு அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். இதனால், அதிமுக மீண்டும் சிதறும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

இந்த நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மூத்த தலைவரான ஆர்.எம்.வீரப்பன் அதிமுகவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்று  தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது,

‘திமுக-வில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணாதுரையின் மகத்துவத்தை பாராட்டி தனது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயரிட்டார். திமுகவின் தலைவராக அண்ணா இருந்தபோது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆட்சியை கைப்பற்றினார்.  தமிழிலும், ஆங்கிலுத்திலும் சிறப்பாக பேசும் திறமை கொண்ட அண்ணா,  தேர்தலில் தோற்றபோது, ராஜாஜி அவரை ராஜ்ய சபாவுக்கு அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்தார். அண்ணாவின் ஆங்கில உரையைக் கேட்பதற்காகவே பண்டிட் நேரு நாடாளுமன்றத்தில் அமர்ந்திருப்பார்.

அதனால்தான் அண்ணாவின்  பெயரில் எம்ஜிஆர்  கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்று பெயரிட்டார். தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் ஆட்சியை நடத்தி வந்தார். ஆனால், அதைத்தொடர்ந்து வந்த தலைமை அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது.  சொல்லப் போனால்,  எம்ஜிஆருடன் அதிமுக காலம் முடிவடைந்துவிட்டது என்பதே உண்மை.

அவரது மறைவுக்கு பிறகு கட்சி ஜெயலலிதா தலைமைக்கு வந்ததும், அண்ணா-திமுக என இல்லாமல், ஜெயலலிதா-திமுகவாக மாறியது. தற்போது, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அது மேலும் உருக்குலைந்து போய்விட்டது. தான் எப்போதுமே ஜெயலலிதாவிற்கு எதிரான மன நிலை யிலேயே இருந்தேன். அதனால்தான்  அதிமுகவிற்கு இனி எதிர்காலம் கிடையாது என்று சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஜானகி அம்மாளை தமிழக முதல்வராக ஆக்கியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ஆர்.எம்.வீரப்பன், முதலமைச்சர்  பதவிக்கு போட்டியிட வேண்டாம் என்றுதான் ஜானகி அம்மாவிடம்  கூறினேன். ஏனென்றால், ஜெயலலிதாவுடன் மோதல் போக்கை ஜானகி அம்மாள் கடைபிடித்தால் எம்.ஜி.ஆரின் பெயர் கெட்டுப்போய்விடும் என்பால், ஜானகி அம்மாள் பதவிக்கு வருவதை  நான் விரும்பவில்லை. ஆனால் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஜானகி அம்மாவை வருங்கால முதல்வர் என்று ஒட்டுமொத்தமாக கூறியதால், நான் அவருக்கு குறுக்கே நிற்கவில்லை.  அவர் முதல்வராக பதவி ஏற்றும் தொடர முடியாத நிலை ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான மனநிலையில் இருந்த நீங்கள் ஏன் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றீர்கள் என்ற கேள்விக்கு,  1991ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக  ஜெயலலிதா தலைமையில் பெரு வெற்றி பெற்றது.  அதிமுக வெற்றி பெற்றது. அப்போது ஜெ.அமைச்சரவையில் இணைய தனக்கு விருப்பமில்லை. ஆனால்,  சசிகலாவின் கணவர் என்.நடராஜன்தான், தன்னை அமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்சியின் நலனுக்காக அவர் எங்கள் இருவரையும் அழைத்து சமரசம் செய்துகொள்ளுமாறு வலியுறுத்திய தால்தான், நான் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற சம்மதித்தேன் என்று கூறியுள்ளார்.

பின்னர், ஜெ.ஆட்சி குறித்தும், ஜெயலலிதாவுக்கு எதிராகவும் ரஜினி பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியபோது, அந்த விழா மேடையில் நான் இருந்தேன் என்ற காரணத்தை சொல்லி, என்னை கட்சியை விட்டு ஜெயலலிதா என்னை நீக்கினார். இந்த சம்பவம் 1995ம் ஆண்டு நடை பெற்றது. ஏற்கனவே எங்கள் இருவருக்கும் இடையே சுமூகமான உறவு கிடையாது என்பதால், என்னை பழிவாங்க இது காரணமாக அமைந்து விட்டது என்றார்.

அதிமுக தோல்விக்கான காரணம், அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டு மக்களிடையே எம்ஜிஆருக்கு அமோக வரவேற்பு உண்டு. மக்களிடையே அவர் விதைத்த விதைகளே அதிமுகவுக்கு வெற்றிவாகை சூடி வந்தது. ஆனால், அதிமுக ஜெயலலிதா கைக்கு வந்த பிறகு அவர், பணத்தால் கட்சியை நடத்தி காரியத்தை சாதித்து வந்தார். ஆனால் அவரது மறைவுக்கு பிறகு,  தற்போதுள்ள தலைவர்களால் அதையும் செய்ய முடியவில்லை. அதனால்தான் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி கிடைத்தது.

இனி வரும் தேர்தல்களில் அதிமுகவால் வெற்றி பெறவே முடியாது என்று கூறியவர், எல்லாம் முடிந்து விட்டது; இனி ஆட்சிக்கு வர முடியாது. அதிமுகவிற்கு அரசியலில் இனி எதிர்காலமே கிடையாது என்றும் கூறினார்.

தற்போது தமிழ்நாட்டில், கருணாநிதி மகன்  மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக, அண்ணா நிறுவிய திமுக போல் முழு பலத்துடன் உள்ளது. திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டுமென்றால் புதிதாக ஒருவர் முளைத்து வரவேண்டும். திமுகவை எதிர்க்க தமிழ்நாட்டில் யாரும் இல்லை.

இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்தார்.