சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில், சென்னை மாநிலக்கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு சார்பில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்-குக்கு சென்னை மாநில கல்லூரியில் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் இந்திய பிரதமாக இருந்த போதுதான் காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்து தந்தார். உள்நாட்டு விமான நிலையத்துக்கு காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்துக்கு அண்ணாவின் பெயரையும் சூட்டினார். மேலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பி.பி.மண்டல் தலைமையில் கமிஷன் அமைத்து, 2-வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால், அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையை செயல்படுத்தினார்.

இந்த சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் உடன் உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினா் வி.பி.சிங் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும்,  அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.