முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் பிரதமர் மோடி! சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்…

Must read

சென்னை: பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்ததாக பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தார். அப்போது, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என மத்தியஅரசு கூறிய நிலையில், தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று விமர்சித்தார்.

இந்த விவகாரம் இன்று சட்டப்பேரவையில் எதிரொலித்தது. பிரதமர் நரேந்திர மோடியிக் கருத்து  குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை விளக்கம் கேட்டார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,  கொ ரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று காணொலி கூட்டம் நடத்தினார். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை குறிப்பிட்டு சில மாநிலங்கள் குறைப்பதற்கான வழிவகையை காணவில்லை என கருத்து தெரிவித்தார். சில மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்பதற்காக விலையை குறைத்து மத்திய அரசு வேடம் போட்டது. மாநில அரசுகள் தேர்தல் முடிந்த பிறகு வேகமாக உயர்த்தியுள்ளது.

“பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும், இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளன என்றும் பிரதமர் கூறியுள்ளார்.இதன்மூலம்,முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் பிரதமர் கருத்து கூறியுள்ளார். ஆனால்,2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது, அதற்கு ஏற்றாற்போல் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்காமல் எண்ணெய் வீழ்ச்சியால் கிடைத்த முழு உபரி வருவாயையும் மத்திய அரசு தனதாக்கி கொண்டது. மேலும்,பெட்ரோல்,மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் மத்திய கலால் வரியானது மாநில அரசுகளோடு பகிர்ந்து அளிக்க கூடியது என்ற காரணத்தால் அதனை குறைத்து மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் வருவாயில் மத்திய அரசு கை வைத்தது.

அதே சமயம்,பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் மத்திய தலைமை வரி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்க தேவையில்லை என்பதால் இந்த வரிகளை கடுமையாக உயர்த்தி மக்கள் மீது சுமையை திணித்து அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான தொகையை மத்திய அரசு தனதாக்கி கொண்டது.

பெட்ரோல் விலையை குறைப்பது போல நடித்து மற்றவர் மீது பழியை போடுவது யார் என மக்களுக்கு தெரியும் என கூறினார்.  பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி மக்களை கஷ்டப்படுத்துகிறது மத்தியஅரச என்று கூறியவர், பெட்ரோல் விலையை குறைத்தது யார்? ஏற்றியது யார்? என்பதை மக்கள் முடிவிற்கே விட்டு விடுகிறேன் என தெரிவித்தார்.

சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கிறது என்பதற்காக விலையை உயர்த்தாமல் இருந்தது யார்? எனவும் கேள்வி எழுப்பினார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதில் முனைப்பு காட்டுவது யார்? நாடகமாடுவது யார்? என்பது மக்களுக்கே தெரியும் எனவும் கூறினார்.

கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது ஒன்றிய அரசு கடுமையாக வரி உயர்த்தியது எனவும் கூறினார். ஒன்றிய அரசுக்கு முன்பே பெட்ரோல் மீதான விலையை குறைத்தது தமிழக அரசு என தெரிவித்தார். இது அனைத்தும் தமிழக மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

More articles

Latest article