சென்னை: முதலமைச்சரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது என்று தெரிவித்துள்ள தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,  டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தொழில்வளர்ச்சியை உலக நாடுகள் வியந்து பாராட்டியுள்ளது என குறிப்பிட்டார்.

‘டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், தமிழகத்தில் தொழில் துவங்க, எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியிருந்தார். அதுபோல எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் குற்றம் சாட்டியிருந்தார். அதுபோல ஆளுநரும் குடியரசு தின  உரையிலும் தமிழ்நாடு அரசு குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில், டாவோஸ் மாநாடு குறித்தும், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கும் தொழிற்துறை அமைச்சர்   டி.ஆர்.பி. ராஜா பதில் அளித்துள்ளார்.

இந்திய அளவில் 2-வது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளதை அறியாமல், அற்பத்தனமாக அறிக்கை வெளியிடுகிறார் இ.பி.எஸ். மாநிலத்தின் மீது அக்கறை இல்லாமல், வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயே கிண்டித்தருவதை ஆளுனரும் இ.பி.எஸ்-ம் மென்றுகொண்டிருக்கிறார்கள் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

டாவோஸ் பெண்களுக்கான மாநாட்டில் தமிழ்நாடு மட்டுமே பங்கேற்றது. தமிழ்நாடு அடைந்துள்ள தொழில்வளர்ச்சியை  உலக நாடுகள் வியந்து பாராட்டி இருப்பதாக தெரிவித்துள்ளர்.

“சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த சர்வதேச அரங்கில் புகழ்பெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் (World Economic Forum-WEF2025) தமிழ்நாடு தனி முத்திரையைப் பதித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் 10 ஆண்டுகாலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் எவரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததிலிருந்து கடந்த மூன்றாண்டுகளாக அரசின் சார்பில் தொழில் துறை அமைச்சரும், துறை சார்ந்த அதிகாரிகள்-வல்லுநர் குழுவும் தொடர்ந்து பங்கேற்று, மாநிலத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

டாவோஸ் நகரில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டம் என்பது முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போடுவதற்கான அரங்கமல்ல. இதை அண்டை மாநிலமான ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் தெளிவாக-விரிவாக, பொருளாதார அறிவாற்றல் உள்ள அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெரிவித்திருக்கிறார்.

உலகளாவிய தொழில் வளர்ச்சி எந்தத் திசையில் பயணிக்கிறது, அதற்ககேற்ப உலகில் உள்ள நாடுகள் தமது தொழிற்கொள்கைகளை எப்படி வகுத்துள்ளன, அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்தெந்த துறையில் முதலீடுகள் பெருகும் உள்ளிட்ட தகவல்களை அறிந்துகொள்ளவும், பரிமாறக்கொள்ளவுமான உலக நாடுகளின் சந்திப்பு மையம்தான் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின் சார்பில் அதில் பங்கேற்று, உலக நாடுகளில் எவற்றுடன் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்தலாம் என்பதற்கான சந்திப்புகள், புதிய நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டிருப்பது தொடர்பான விளக்கங்கள் ஆகியவற்றை முன்னெடுக்கும் அருமையான வாய்ப்பு அமைந்தது.

கடந்த மே 2021முதல் மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முன்னெடுத்த தொழிற்கொள்கையாலும், முதலீட்டாளர் சந்திப்புகள், உலக முதலீட்டாளர் மாநாடு ஆகியவற்றாலும் பன்னாட்டு-உள்நாட்டு நிறுவனங்களுடன் 893 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதன் விளைவாக 10,07,974 ரூபாய் முதலீடுகள் ஈர்ப்பதற்கான வாய்ப்புகளும், 19,17,917 நேரடி வேலைவாய்ப்புகளுடன் 31,53,862 மொத்த வேலைவாய்ப்புகள் உருவாவதற்கான சூழலை அமைத்து, தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட முறையில் பல தொழிற்சாலைகள் உருவாகி, வேலைவாய்ப்பை வழங்கி, உற்பத்தியைத் தொடங்கியிருப்பது குறித்த விவரங்களை டாவோஸில் சந்தித்த உலக நாடுகளின் நிறுவனங்களிடம் விளக்கி, அவர்களைத் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்திப்புகள் நடந்துள்ளன. சிங்கப்பூர் நாட்டின் துணை பிரதமர் கான் கிம் யோங் உடனான சந்திப்பின் வாயிலாக செமிகண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு மற்றும் மருத்துவத் தொழில்நுட்பம், மருந்துகள், உணவு ஏற்றுமதி ஆகியவை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, சாதகமான பதில்களைப் பெற்றுள்ளோம். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டோக் அல் மார்ரி உடனான சந்திப்பில் உணவு ஏற்றுமதி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஐக்கிய அரபு நாடுகள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவின் தொழில் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பந்தர் அல்ஹோர்யெஃப் உடனான சந்திப்பில் சவுதி அரேபிய அரசாங்கத்தின் தொழில்துறை சார்ந்த திட்டங்களுடன் தமிழ்நாட்டின் வளர்ச்சிகரமான உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப சூழலியல் கட்டமைப்பு பொருந்தி வருவது குறித்து ஆக்கப்பூர்வமாகப் பேசப்பட்டுள்ளது.

வானியல் தொழில்நுட்பம், குவாண்டம் கம்ப்யூட்டிங், நீடித்த தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஐரோப்பாவுடனான தமிழ்நாட்டின் தொடர்புகள் குறித்து ஃபின்லாந்து நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் கூட்டுறவு வளர்ச்சித் துறை அமைச்சர் வில்லி டாவியோ அவர்களுடன் நடந்த சந்திப்பில் ஆராய்ச்சித்துறைகளில் இந்தியாவும் ஃபின்லாந்தும் இணைந்து செயலாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பஹ்ரைன் அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் அப்துல்லா ஃபாக்ரோவுடன் நடந்த சந்திப்பில் பல்வேறு துறைகள் சார்ந்த கூட்டுத் தொழிற்திட்டங்களுக்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தொழில் சூழலியல் கட்டமைப்பு கொண்ட தமிழ்நாட்டில் உற்பத்தி அடித்தளத்தை விரிவுபடுத்தும் வகையில் மின்னணு துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் சாதகமான பதிலை அளித்துள்ளது. குறைந்தபட்சம் இரண்டு புதிய தகவல் மையங்களுக்கான முதலீட்டிற்கானப் பேச்சுவார்த்தைகள் நடந்தேறியுள்ளன. உலகளாவிய உணவு பதப்படுத்தும் நிறுவனம் ஒன்று தன்னுடைய உற்பத்திப் பொருட்கள் சார்ந்த முதலீட்டிற்கு ஆயத்தமாகியுள்ளது.

பிரபல உணவுத் தயாரிப்பு நிறுவனம் தமிழ்நாட்டின் தளவாடக் கட்டமைப்பு மற்றும் வேளாண் வளர்ச்சியை அறிந்து முதலீடு செய்ய முன்வந்துள்ளது. ஜி.சி.சி மையங்களை அமைத்திட இரண்டு பெரிய நிதி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இரண்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய ஜி.சி.சி மையங்களுடன் உற்பத்தி நிறுவனத்தை அமைக்கவும் ஆர்வம் தெரிவித்துள்ளன. டிட்கோ நிறுவனம் மூலமாக உருவாக்கப்படும் தமிழ்நாடு அறிவுசார் நகரம் குறித்து அறிந்த பன்னாட்டு முன்னணி பல்கலைக்கழகங்கள் நம்முடன் இணைந்து ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புத் துறைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

செயற்கை நுண்ணறிவு, பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த இருதரப்பு கலந்துரையாடல்களின் வழியே மேம்பட்ட உற்பத்தி, ஆராய்ச்சி, தயாரிப்புகளில் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு, மிகச்சிறந்த மையமாகத் திகழ்வதை உலக நாடுகளிடம் உறுதி செய்துள்ளோம்.

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் இந்தியா பெவிலியனைத் தொடங்கி வைக்கும் நிகழ்விலும் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மராட்டிய மாநில முதலமைச்சர் மற்றும் சில மாநிலங்களின் அமைச்சர்களுடன் இணைந்து அந்த நிகழ்வில் பங்கேற்று, தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளில் உருவாகியுள்ள தொழில்வளர்ச்சியையும், தொழிற்கட்டமைப்புகளையும், புதிய முதலீடுகளுக்கான சூழலையும் விளக்கி, ஏற்கனவே தொழில்துறையில் வளர்ந்துள்ள மாநிலங்களுடன் ஒருங்கிணைந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு ஆற்றி வரும் முக்கியப் பங்கினைக் குறிப்பிட்டேன்.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களில் 43% பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்று கிறார்கள் என்பது உலக அரங்கில் வியப்புடன் கவனிக்கப்படுகிறது. பல மாநிலங்கள் உள்ள ஒரு நாட்டில் ஒரேயொரு மாநிலம் எப்படி இந்தளவிற்கானப் பங்களிப்பை செய்ய முடிகிறது என்பது குறித்து மற்ற நாடுகளும் அறிந்துகொள்ளும் வகையில் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் Women In Tech Hub அமர்வில் தமிழ்நாடு மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது.

இத்துறை சார்ந்த வல்லுநர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது தமிழ்நாட்டில் கடந்த நூறாண்டுகளாக திராவிட இயக்கம் முன்னெடுத்த பாலின சமத்துவம், கல்வி வாய்ப்பு, பெண்களுக்கான இடஒதுக்கீடு, அவர்களை அதிகாரமயப்படுத்துதல், திராவிட மாடல் அரசின் விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், தோழி விடுதி, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்படும் உயர்தர ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பயிற்சி ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்க முடிந்தது.

இந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட கருத்துகளால் ஈர்க்கப்பட்டு, ஜப்பான் நாட்டில் இதற்காகவே ஒரு தனிக் கூட்டம் நடத்துவதற்கும் அதில், தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு குறித்து உலக நாடுகள் பங்கேற்கும் கலந்துரையாடலுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

‘டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பொருளாதாரத்தில் தமிழ்நாடு என்ன சாதித்தது? என்பதை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (Econmic advisary council report to pm report – EAC-PM) அறிக்கையை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள்!

இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறிந்து கொள்ளாமல் அற்பதனமாக அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 1960-1961ல் 8.7 சதவிகிதமாக இருந்தது. அது 2023-2024-ல் 8.9 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.  தனி நபர் வருவாயைப் பொறுத்தவரை, தேசிய சராசரியோடு ஒப்பிடுகையில் தமிழகத்தின் சராசரி 2023-2024-ல் 171.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகிய 5 மாநிலங்களும் 2023-2024-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30 சதவிகித பங்கினை கொண்டிருக்கின்றன என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முதலமைச்சரின் ஆட்சித்திறனால் தமிழ்நாட்டின் புகழ்க்கொடி உலக அரங்கில் உயர்ந்து பறக்கிறது.

உலக நாடுகள் வியக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொழிற்கட்டமைப்பும், பெண்களின் பங்களிப்பும் திமுக அரசின் செயல்பாடுகள் டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் கவனம் ஈர்த்துள்ள நிலையில், மாநிலத்தின் மீது எவ்வித அக்கறையுமில்லாமல் வெறும் அவதூறுகளை ஆளுநரும் எதிர்க்கட்சித் தலைவரும் மென்று கொண்டிருக்கிறார்கள்”.

இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

முன்னதாக எதிர்க்கட்சி தலைவர்  எடப்பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுவிட்சர்லாந்து நாட்டில், டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் 2025-ஆம் ஆண்டுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் உலக அளவிலான வணிக நிறுவனங்களின் தலைவர்களும், அரசு துறையைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதில், உலக அளவில் பொருளாதார நிலை, வணிக மாற்றங்கள், மாறி வரும் தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பற்றியெல்லாம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களும் கலந்துகொண்டுள்ளன.

தமிழ் நாட்டின் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவும் கலந்துகொண்டிருக்கிறார். பத்திரிக்கை செய்திகளில் மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற பல்வேறு மாநிலங்கள் பெருமளவு முதலீட்டை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த மாநாட்டில் கையெழுத்திட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்துறை அமைச்சரும், இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். ஆனால், தமிழ்நாட்டிற்கு எவ்வளவு முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற விவரம் தெரியவில்லை. பிற மாநிலங்கள் எல்லாம் தீவிர முயற்சி மேற்கொண்டு இந்த கூட்டத்திலும் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுத்த நிலையில் தமிழ் நாட்டின் சார்பாக இதில் கலந்துகொண்ட அமைச்சர் டிஆர்பி ராஜா எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

இதிலிருந்து ஸ்டாலின் கூறுவது போல், தமிழகத்திற்கு பலரும் போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்து வருவதாக கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

உண்மையான முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நாடி வருவதாகவும் தெரியவில்லை. எங்கள் ஆட்சியில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஈர்த்த முதலீடு எவ்வளவு என்று கூப்பாடு போட்டு வெள்ளை அறிக்கை கேட்ட ஸ்டாலின், கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியும், நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டும் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்றும், தற்போது டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பெறப்பட்ட முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எவ்வளவு ? உண்மையில் இதுவரை பெறப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்பது பற்றியும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

திமுக அரசு இதுவரை அதுபற்றிய நிறுவனங்கள் வாரியான விவரங்களை வெளியிட தயக்கம் காட்டுவது ஏன் ?” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், 2025ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாடு மூன்று நாட்கள் நடந்தது. இதில், மஹாராஷ்டிரா 15.70 லட்சம் கோடி, தெலுங்கானா 1.79 லட்சம் கோடி ரூபாய், முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. ‘வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழகம்’ என்ற முழக்கத்துடன் பங்கேற்ற, தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை. இது, தமிழகத்திற்கு பெரும் தோல்வியாகும். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு,முதலீடுகளை ஈர்க்கும் திறன், தமிழகத்திற்கு குறைந்து வருகிறது என விமர்சனம் செய்திருந்தார்.

ஆளுநர் ஆர்என்.ரவி தனது குடியரசு தின உரையில் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதில், தமிழகத்தின் சுமார் 1.5 லட்சம் கோடி முத்ரா கடன் பயனாளிகளில், பாதி பேர் பெண்கள் தான். 2047-ம் ஆண்டுக்குள், முழுமையாக வளர்ச்சியடைந்த, தற்சார்புடைய நாடாக மாற்றுவோம். இதை நிறைவேற்றிக் காட்டுவது நம் அனைவரின் குறிக்கோளாகும். இதில் தமிழகத்துக்கு ஒரு பெரிய பங்களிப்பு இருக்கிறது. ஆனால், அது நிறைவேற்றப்படுவதுபோலத் தெரியவில்லை. துரதிர்ஷ்டவசமாக, நமது மாநிலம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

2-ம் வகுப்பு புத்தகங்களை படிக்கத் தெரியவில்லை…

நமது அரசுப் பள்ளிகளில் 75 சதவிகித மாணவர்களால், இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகங்களைக் கூட படிக்கத் தெரியவில்லை. 11 முதல் 99 வரையிலான இரண்டு இலக்க எண்கள் கூட அவர்களுக்கு அடையாளம் காணமுடிவதில்லை. இரண்டு இலக்க கூட்டல் – கழித்தல்களைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. அரசுப்பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், அரசுப்பள்ளிகளில் கற்றலில் ஏற்பட்டிருக்கும் இந்த சரிவு, ஏழைகளின் எதிர்காலத்தை மேலும் ஆபத்துக்குள்ளாக்குவதோடு, நீண்டகால சமூக மற்றும் பொருளாதார அநீதி அவர்களுக்கு இழைக்கப்படுவதை இது மேலும் அதிகப்படுத்தும்.

உயர்கல்வியின் நிலைக் கூட சிறப்பாக இல்லை. நமது 20 மாநில பல்கலைக்கழகங்களில், சுமார் 25 லட்சம் மாணவர்கள் சேர்க்கப் பட்டிருக்கிறார்கள். பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. அவை மோசமான நிதிநெருக்கடியைச் சந்தித்து வருகின்றன, ஆசிரியர்களுக்கு ஊதியத்தைக் கூட அளிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, மாநில அரசிடமிருந்து அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதிப்பங்கீடு கிடைக்கவில்லை.

பல்கலைக்கழகங்களின் நிலை..

இதன் விளைவாக, பல பல்கலைக்கழகங்கள், 50 சதவீதத்துக்கும் குறைவான ஆசிரியர்களின் எண்ணிக்கையோடு செயல்படுகின்றன. சென்னை பல்கலைக்கழகத்தில், 66 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. துணைவேந்தர்கள் இல்லாமை, பல்கலைக்கழகத்தை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. ஏற்கமுடியாத, அற்பமான காரணங்களுக்காக, துணை வேந்தர்கள் நியமனத்தை நடக்கவிடாமல் செய்வது என்பது, பின் வாயில் வழியே பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி அதிகாரத்தைச் சிதைக்கும் தவறான வழி.

அண்ணா பல்கலைக் கழகம்

இதனால் கல்வித்தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய வீழ்ச்சி காரணமாக, மேலும் மேலும் பலபட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமை, ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோர் பணியமர்த்தமுடியா நிலையில் உள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும் நமது பல்கலைக்கழகங்கள் உருவாக்கும் 6,000-த்திற்கும் மேற்பட்ட முனைவர்களில், 5 சதவிகிதம் பேரால் கூட, தேசியத் தகுதித்தேர்வு (NET), அல்லது இளநிலை ஆய்வு மாணவர் நிலை (JRF)-க்கான குறைந்தபட்ச ஆய்வுத்தரத்துக்குத் தேர்ச்சி பெற முடியவில்லை. பல மில்லியன் மாணவர்களின் எதிர்காலம் அபாயத்தில் இருக்கிறது.

`சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள்’

கல்வி நிறுவன வளாகங்களைச் சுற்றி நிலவும் சட்டவிரோதமான போதைப்பொருள் அச்சுறுத்தல் கவலையளிக்கிறது. சர்வதேச போதைப்பொருள் கூட்டமைப்புகளோடு தொடர்புடைய, சக்திவாய்ந்த போதைப்பொருள் கும்பல்கள் நமது மாநிலத்தில் இயங்கி வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இளைஞர்களுக்கு போதைப்பொருள் விற்கும் போது, அடிமட்டத்தில் இந்தக் குற்றங்களில் ஈடுபடுவோர், சிலவேளைகளில் அமலாக்கப் பிரிவுகளால் பிடிக்கப்பட்டாலும், போதைப்பொருள் கூட்டமைப்புக்களை இயக்கி வரும் பெரும்புள்ளிகள் தொடப்படுவதில்லை.

பாலியல் தாக்குதல்கள்..

போதைப்பொருள் கூட்டமைப்புக்களின் முக்கியப்புள்ளிகள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படவில்லை என்றால், பெருகி வரும் போதைப்பொருள் அபாயம், நமது எதிர்காலச் சந்ததிகளை அழித்துவிடும்.
2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில், மிகப்பெரிய கள்ளச் சாராய பெருந்துயர்கள், மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. சுமார் 100 பேர் இறந்தார்கள், பலநூறு குடும்பங்கள் கள்ளச் சாராயத்தால் நிலைகுலைந்து போயின. ஏழை மக்களின் மரணத்திலும், அழிவிலும் லாபமடையும் கள்ளச் சாராயத்தின் பெருமுதலைகள் சுதந்திரமாக இருக்கும் அதேவேளையில், கீழ்மட்டத்தில் இருக்கும் கையாள்கள் சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மக்களின் மீது கொடுமைகள்..

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் மறுக்கப்படுகிறது.

தங்களுடைய வாழ்க்கையையே சமூகநீதியை நிலைநிறுத்த அர்ப்பணித்த இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜாவைப் போன்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மாபெரும் தலைவர்கள் பற்றிப் பெருமிதம் கொள்ளும் மாநிலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் மீது இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன.

முதலீடு குறைந்தது…

சில ஆண்டுகள் முன்புவரை, தனியார் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாநிலமாக நமது மாநிலம் இருந்தது. ஆனால் இன்று முதலீட்டாளர்கள் தமிழகத்தை விடுத்து மற்ற மாநிலங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். 2021-22-ம் நிதியாண்டில், மாநிலங்களிலேயே அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்த்த 4-வது மாநிலமாக தமிழகம் இருந்ததோடு, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவு முதலீட்டைப் பெற்றது.

`தமிழகத்தில் தற்கொலை அதிகம்..’

2023-24-ம் ஆண்டில் நமது மாநிலம் 6-வது நிலைக்கு வீழ்ச்சி கண்டதோடு, 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவே முதலீட்டைப் பெற்றது. இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும், வேலைவாய்ப்பிற்கும் பாதகமான விளைவுகளை உண்டாக்கும். முதலீட்டாளர்களை அச்சுறுத்தும் காரணங்களை நாம் அகற்றியாக வேண்டும். நாட்டிலேயே மிக அதிக தற்கொலை விகிதமுடைய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு சராசரி 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி.

தமிழ்நாடு அரசு

நமது மாநிலமான தமிழகத்திலோ, ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 26-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் என்ற நிலை இருக்கிறது. இது தேசிய சராசரியை விட இருமடங்குக்கும் அதிகமானது. நமது மாநிலத்தில் சுமார் 20,000 பேர் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழகம்தான் இந்தியாவின் தற்கொலைத் தலைநகரம் என்கிறார்கள். தீவிரமான சமூக மற்றும் பொருளாதார துயர் நிறைந்த சூழல், வளர்ச்சிக்கும் நீதிக்கும் எதிரானது. இதில் விரிவான உடனடி நடவடிக்கை தேவைப்படுகிறது. 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதமாக ஆகும் பாதையில் நமது தேசம் தன்னம்பிக்கையோடு பயணிக்கிறது.

பொய்யான கருத்துரைகள்..

அதேநேரத்தில் உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் , சில சுயநலமிகளும், எதிரி சக்திகளும் நமது முன்னேற்றத்தின் வேகத்தைக் குலைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இனம், சமயம், மொழி, சாதிகளின் பெயரால் நமது சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, அதைச் சிதைக்க முயற்சி செய்கிறார்கள். தவறான, எதிர்மறை கூற்றுகள் வாயிலாக, நமது மக்களின் நெஞ்சுரத்தை பலவீனப்படுத்த முயற்சி நடக்கிறது. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், அரசியல் சட்டபூர்வமாக நிறுவப்பட்ட அமைப்புகளின் மீதும், நமது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் பொய்யான கருத்துரைகளைப் பரப்பி வருகிறார்கள். இத்தகைய தேசவிரோதக்கூறுகளுக்கு எதிராக, விழிப்போடு இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.