சென்னை:  உலக பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஜப்பான் நாட்டின் கோபே நகரில்  நடப்பாண்டுக்கான மாற்று திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்  நடைபெற்று வருகின்றன. இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அடிப்படையில் இந்தியா நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு  ஏற்கனவே  கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற  ரியோ பாரரா ஒலிம்பிக்கில்  தங்க பதக்கத்தை வென்றார். பின்னர்,  2021 பாரா ஒலிம்பிக் போட்டியில் டி63 பிரிவில் வெள்ளி பதக்கத்தை  பெற்றதுடன் கடந்த 2023ம்   ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டிகளில் டி63 பிரிவில் மாரியப்பன் தங்கவேலு மீண்டம் வெள்ளி பதக்கத்தை பெற்ற நிலையில், தற்போது 2வது முறையாக ண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தங்கம் வென்ற தங்கமகன் மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  ஜப்பானில் நடக்கும் உலக பாரா தடகள போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் எனும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் மகத்தான பெருமையைத் தேடித்தந்துள்ள அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன். இந்த வெற்றியை ஈட்டுதற்காக அவர் மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இந்த வெற்றிக்குத் துணைபுரிந்துள்ள குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெறும் #WorldParaAthletics-ல் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல உச்சங்களைத் தொட்டு நாட்டிற்கு மென்மேலும் பெருமைசேர்க்க வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

பாரா ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வென்றார் ‘தங்கமகன்’ மாரியப்பன் தங்கவேலு! வீடியோ