சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கோடை காலத்தின் தொடக்கத்தில் வரலாறு காணாத அளவில் வெளியில் கொளுத்தியது. ஆனால், அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு மேலும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், மக்களை குளிர்விக்கும் வகையில், கோடை மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

இந்த நிலையில்,  தென்மேற்கு வங்கக்கடலில்  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும், இது மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. தென்மேற்கு, அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து 24-ல் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெறக் கூடும். இதனால் தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை (வியாழக்கிழமை) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை மறுதினம், 24-ஆம் தேதி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

பின்னர், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகிற 25-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இன்று ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு வானிலை மையம் அறிவித்துள்ளது.