சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் இன்று மதியம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா எனும் கொடிய தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணாக்கர்களின் கல்வி கேள்விக்குரியதாகி உள்ளது. இதற்கிடையில் தொற்று குறையத்தொடங்கியதும், செப்டம்பர் 1ந்தேதி முதல், உயர்நிலை, மேல்நிலை, கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளும் திறக்கப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனமும், படிப்படியாக கல்வி நிலையங்களை திறக்கலாம் என அறிவுறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 30ந்தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனால், ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இதில், ஊரடங்கு மேலும் நீட்டிக்க வேண்டுமா, பள்ளிகளை திறக்கலாமா?, ழிபாட்டுத்தலங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க அனுமதி வழங்கலாமா, தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக்கு அனுமதிக்கலாமா உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்தும், அதோடு, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளை திறப்பது குறித்தும், முதல்கட்டமாக 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.