லக்னோ:
உ.பி.யில் 5 முறை எம்பி.யாக வெற்றி பெற்று வலம் வருபவர் ஆதித்யாநத். இந்து யுக வாகினி என்ற அமைப்பின் நிறுவனரான இவர் பாஜ மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். பாஜ கூட்டணியில் போட்டியிட்டு வந்த இவர் இந்த சட்டமன்ற தேர்தலுக்கு பாஜவுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

உபி முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று பாஜவுக்கு ஆதித்யாநத் நெருக்கடி கொடுத்தார். ஆரம்பத்தில் இதை பாஜ ஏற்றுக் கொண்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதோடு சட்டமன்ற தேர்தலுக்கு 10 நபர்களை வேட்பாளராக அறிவிக்கும்படி பாஜவுக்கு பரிந்துரை செய்தார்.

இதில் இரண்டு பேரை மட்டுமே பாஜ ஓகே செய்தது. இது ஆதித்யாநத்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதோடு முதல்வர் வேட்பாளர் பரிசீலனையில் தனது பெயர் இல்லை என்பதை இவர் அறிந்து கொண்டார். இதனால் தனது ஆதரவாளர்கள் மூலம் பாஜவுக்கு நெருக்கடியை கொடுத்து வருகிறார்.

இவர் 5 முறை வெற்றி பெற்றதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜ தொண்டர்கள் யாரும் காரணமில்லை. அந்தளவுக்கு இவருக்கு அங்கு செல்வாக்கு. இதை பயன்படுத்தி இவரது அமைப்புக்கு செல்வாக்கு உள்ள 64 தொகுதிகளில் அமைப்பு சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும் பாஜவுக்கு எதிராக இவர்கள் போட்டியிடுவார்கள் என்றும், பாஜவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இது பாஜவுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

உபி.யில் போஸ்டர்களில் போடும் அளவுக்கு பிரபலமாக எந்த தலைவரும் பாஜவில் இல்லை. மோடி மற்றும் அமித்ஷா படத்தை மட்டுமே பிரசுரிக்கும் நிலை உள்ளது. ஆதித்யாநத் செல்வாக்கு குறித்து டெல்லியில் உள்ள தலைவர்கள் அமித்ஷாவுக்கு தவறான தகவல் கொடுத்துள்ளனர்.

இவரது ஆதரவு இல்லை என்றால் கிழக்கு உபி. பகுதியில் பாஜ நுழைய முடியாது. பணமதிப்பிழப்பு அறிவிப்பு மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் பாஜ மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதனால், மக்கள் செல்வாக்கு பெற்ற ஆதித்யாநத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒன்று என் வழியில் பாஜ வர வேண்டும். இல்லை என்றால் தனி வழியில் செல்வேன் என்று பாஜவுக்கு ஆதித்யாநத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.  எதிர்தரப்பில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கூட்டணியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் வலுவான நிலையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் பாஜ தலைவர் அமித்ஷாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.