சென்னை: 
ழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்ல இருக்கிறேன் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகத் தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 மாதத்திற்கு மேலாகக் கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடியப் பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்து மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீடுகளை இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கன்னியாகுமரி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் கனமழை தொடர்பான பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காகத் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் நாளை கன்னியாகுமரி செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துத்தான் வேலை செய்கிறோம். மழை வெள்ள பாதிப்புகள் குறித்த ஆய்வறிக்கையைப் பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.