மதுரை: அக்டோபர் 2ந்தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாட்டில் கிராமசபை கூட்டம்  நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த ஓராண்டாக கிராமசபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளதால், காந்திய பிறந்தநாளான அக்டோபர் 2ந்தேதி கிராமசபை கூட்டங்களை கொரோனா வழிகாட்டுதல்களுடன் நடத்தலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், மதுரை மாவட்ம்  பாப்பாப்பட்டியில் உள்ள கள்ளர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி காலை கிராம சபை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதலமைச்சரின் வருகையை ஒட்டி பாப்பப்பட்டி பகுதியில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முதல்வர் மதுரை வருவது உறுதியாகி உள்ளது.

பாப்பாப்பட்டியில் உள்ள கள்ளர் மேல்நிலை பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் சுத்ப்படுத்தப்பட்டு வருகிறது. இப்போதே பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின, மாநில முதல்வராக  பொறுப்பேற்ற உடன் கடந்த மே மாதம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யமதுரை வந்திருந்தார். அதன்பிறகு, தற்போது கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க மீண்டும் மதுரை செல்கிறார்.