சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு களை ஆய்வு செய்ய இன்று மாலை கடலூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து டெல்டா மாவட்டங்களிலும் ஆய்வு செய்கிறார்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. முன்னதாக இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூர் அருகே கரையை கடக்க இருந்தது. இதனால் கடந்த நான்கு நாட்களாக சென்னை முதல் கடலூர், பாண்டிச்சேரி, காரைக்கால் உள்பட பல பகுதிகளில் மழை கொட்டி வருகிறது.

சென்னையில் பெய்து வரும் தொடர்மழையால், மாநகரம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறி, தனித்தீவு போல காட்சி அளிக்கிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளதாலும், மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளதாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, சென்னையில் 4 நாட்களாக நிவாரண பணிகளை மேற்கொண்ட முதல்வர் இன்று மாலை கடலூர் சென்று வெள்ளப்பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளார்.

 இன்று மாலை கடலூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆயவு செய்ய உள்ளதுடன்,  தொடர்ந்து 2 நாள்கள் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.