காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், இருங்காட்டுக்கோட்டை சென்று, அங்கு ஹுண்டாய் ஆலை தயாரித்த 1 கோடியாவது காரை அறிமுகம் செய்து வைத்தார்.

முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக காஞ்சிபுரம் சென்ற முதல்வர் அங்குள்ள அண்ணா நினைவு இல்லத்திலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வின் போது முதல்வருடன் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

அதையடுத்து,  காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சென்றார். இந்த ஹுண்டாய் தொழிற்சாலையானது 1998ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்வராக கருணாநிதி தலைமையிலான  திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்டது.

ஹுண்டாய் தொழிற்சாலையில் கார்கள் தயாரிப்பு 1 கோடியை எட்டியது. ஒரு கோடி கார் உற்பத்தி செய்யப்பட்டுள்ள நிலையில் ஹுண்டாய் ஆலை தயாரித்துள்ள, 1 கோடியாவது காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்,  தமிழகத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் பங்களிப்பு அதிகம் என்றும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேவையாற்றி வருகிறது ஹூண்டாய் கார் நிறுவனம் என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், தமிழகத்தின் பொருளாதார நிலையை சரிசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது தொழில்துறையில் அதிக முதலீடுகளை பெறும் வகையில் அரசின் மீது நம்பிக்கை தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவேன் என்றும் கூறினார்.