டெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இதுதொடர்பான நெறிமுறைகளை 6 வார காலத்திற்குள் வகுக்க வேண்டும் என்றும் மத்தியஅரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றால் இதுவரை 3,98,454 பேர் பலியாகி உள்ளனர். இதற்கிடையில் ஏராமான கொரோனா மரணங்கள் மறைக்கப் படுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பல வழக்குகள் மாநில நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் விசாரிக்கப்பட்டு வருகிறது. மனுதாரர் தரப்பில்,  கொரோனா அல்லது கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சனைகளால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. அதன்படி,  நிவாரணம் என்பது சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டிய ஒன்று என்றும் அது விருப்பு வெறுப்பை பொறுத்தது அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள  நீதிபதிகள், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி, கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு கருணைத் தொகை உள்ளிட்ட குறைந்தபட்ச நிவாரணத்தை வழங்குவது, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் பொறுப்பு.

அதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு எவ்வளவு நிவாரணம் வழங்கலாம், அதற்கான தொகை மற்றும் வழிகாட்டுதல் நெறிமுறைகளை 6 வாரங்களுக்குள் முடிவு செய்து அறிவிக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தை அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவுக்கு பலியானவர்களின் இறப்புச்சான்றிதழில் இறப்புக்கான காரணம், நாள் ஆகியவற்றை கட்டாயம் குறிப்பிடுமாறு  உத்தரவிட்ட நீதிபதிகள்,  இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு திருப்தி அளிக்கவில்லை என்றால் அவற்றை ஆய்வு செய்து மாற்றுவதற்கான வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.