சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பிரச்சினை, கொசஸ்தலை ஆற்று நீர், பில்லூர் குடிநீர் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட  அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாள் அமர்வில் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கிளாம்பாக்கம் பேருந்த நிலையம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதுபோல, திமுக எம்எல்ஏ,திருத்தணி தொகுதி இரா.கி. பேட்டை வட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் நீர் எடுப்பது குறித்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் நேரு பதில் அளித்தனர்.

பொன்னை ஆற்றில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா என திருத்தணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, திருத்தணி தொகுதி இரா.கி. பேட்டை வட்டத்துக்கு கொசஸ்தலை ஆற்றில் இருந்து நீர் எடுக்க ரூ.44.5 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது 15 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன; இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிவடைந்துவிடும். இரா.கி.பேட்டை வட்டத்துக்கு பொன்னை ஆற்றில் நீர் ஆதாரம் இல்லாததால் கொசஸ்தலையில் நீர் எடுக்க திட்டம். திருத்தணி தொகுதியில் 4 ஊராட்சிகளில் உள்ள 53,540 பேருக்கு நாள் ஒன்றுக்கு 2.15 mld குடிநீர் வசதி செய்துதர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதுபோல பில்லூர் குடிநீர் திட்டம் தொடர்பான கேள்விக்கு,  கோவை மக்களுக்கு ஒருநாள் ஒரு நாள் விட்டு ஒருநாள் குடிநீர் வழங்க பில்லூர் 3-வது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பில்லூர் 3வது திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 300 எம்.எல்.டி. நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர்  நேரு கூறினார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்அடிப்படை வசதிகள் இல்லை, சிறுசிறு பிரச்சினைகள் உள்ளன, பொதுமக்கள் அவதிப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.

இதறகு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கிளாம்பாக்கத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இல்லை. பெரிய பிரச்சினைகள் இருந்தன, பிரச்னைகளை சரிசெய்தே பேருந்து நிலையம் திறக்கப்பட்டு என்றும், எதிர்க்கட்சி தலைவர் கூறிய சிறுசிறு பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் என்றார்.

தொடர்ந்து அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு, கிளாம்பாக்கம் தொடர்பாக பேசினார். அப்போது கிளாம்பாக்கம் என்பதற்கு பதில்க கேளம்பாக்கம் என்றார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர்,  அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு..’ அது கேளம்பாக்கம் இல்ல கிளாம்பாக்கம்.. என கலாத்ததுடன்,

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தேர்வு செய்ததே அதிமுக ஆட்சிதானே என்றார். தொடர்ந்து செல்லூர் ராஜுவின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறிய அமைச்சர் சேகர்பாபு,  செல்லூர் ராஜு வந்தால், அவரை  அழைத்துச் சென்று நேரில் காட்டத்தயார் என்று கூறியதுடன்,  மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் பயணம் செய்து வருகின்றனர் என்றும்,  பேருந்து நிலையத்துக்கு கலைஞர் பெயர் வைத்ததால்தான் அவதூறு பரப்புகின்றனர் என்றும் கூறினார்.