சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு, கடந்த 8 மாதங்களாக இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்த  செந்தில் பாலாஜியின்  திடீர் ராஜினாமா  சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவரது ராஜினாமா கடிதம் ஏற்பட்டுள்ளதாக, ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியின்போது பல்வேறு ஊழல்  செய்து, திமுகவின் அதிரடி குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர் செந்தில் பாலாஜி. இவர்  ஜெ. மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவி, அதன்மூலம் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சர் பதவியை பெற்றார்.  திமுக தலைமை மற்றும் கிச்சன் கேபினட் என உச்ச அதிகாரத்துடன் எளிதில் ஒட்டிக்கொண்டு அதிகார முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்தார். திமுக தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கைக்கு உரியவராக வலம் வந்தார்.  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணிக்கான வெற்றி என செந்தில் பாலாஜியின் கொடி உயரப்பறந்தது. இது திமுகவினரிடையே கூட சலசலப்புகளை ஏற்படுத்தியது.

இதனால் அதிக மமதையில் திகழ்ந்த செந்தில் பாலாஜி,  உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்தபோது, தனது துறை அதிகாரிகள் ‘மூலம் மின்சார தடையை ஏற்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், அவர்மீது மத்தியஅரசு பல்வேறு அமைப்புகளை ஏவிவிட்டு கைது செய்தது.  இதன் காரணமாக, கடந்த 20243ம் ஆண்டு,   ஜூன் 14 அன்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. இதையடுத்து அவர் பல்வேறு வித்தைகளை அரங்கேற்றினாலும், இப்போதுவரை அவர் சிறையில்தான் வாடி வருகிறார்.  ஆனால், திமுக அரசு, அவரது அமைச்சர் பதவியை பறிக்காமல், இலாகா இல்லாத அமைச்சராகவே தொடரச் செய்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில்,  சிறையில் அடைக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் அமைச்சராக தொடர்வது ஏன் என உயர்நீதிமன்றமும் கேள்வி எழுப்பியது. சாதாரண அரசு ஊழியர் கைது செய்யப்பட்டால் 48மணி நேரத்தில் அவரது பதவி முடக்கப்படும் நிலையில், அரசு ஊழியரான அமைச்சர் சிறையில் எப்படி அமைச்சராக தொடர முடியும் என கேள்வி எழுப்பியது. ஆனால்,. அதை திமுக அரசு கண்டுகொள்ளாத நிலையில்,  கடந்த 8 மாதமாக  புழல் சிறையிலேயே இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார் செந்தில் பாலாஜி.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் 2வது ஜாமின் மனு மீதான விசாரணை நாளை (பிப்ரவரி 14ந்தேதி) மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவுள்ளது. இதன் காரணமாக, அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று இரவு (பிப்ரவரி 12ந்தேதி) திடீரென அறிவித்தார். இதையடுத்து, அவரது ராஜினாமா கடிதம் கவர்னர் மாளிகைக்கு முதலமைச்சர் ஸ்டாலினால் பரிந்துரை செய்யப்பட்டது.

தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்று  செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்பட்டுள்ளதாக கவர்னர் மாளிகை தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இது தொடர்பாக கவர்னரின் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.