சென்னை: திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, விமான நிலைய திறப்பு விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று காலை 10 மணி அளவில் திருச்சி வரும் நிலையில், அவரை வரவேற்க  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் திருச்சி சென்றார்.

பிரதமர் மோடி தமிழகம் வருவதையொட்டி அவருக்கு ஆளுநர் ரவி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “ புண்ணிய பூமியான திருச்சிராப்பள்ளியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார்.  அவர் விமானம், ரயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, துறைமுகம் போன்ற பல முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களைத் திறந்து வைக்கிறார். தமிழக மக்கள் மீது உங்களின் அபரிமிதமான அன்புக்கும் பாசத்திற்கும், மாநிலத்தின் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உங்கள் அர்ப்பணிப்புக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.

காலை 10 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடயும் பிரதமர் மோடி, காரில் பயணித்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்கிறார்.  அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் காலை 10.30 மணிக்கு தொடங்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் 33 பேருக்கு பட்டங்களை வழங்கி பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து கார் மூலம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்து அங்கு கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பார்வையிட்டு, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடுகிறார்.

அதைத்தொடர்ந்து, திருச்சி விமானநிலைய புதிய முனையத்தை திறப்பதோடு சேலம் – மேக்னசைட் சந்திப்பு – மேட்டூர் அணைப் பிரிவில் 41.4 கிமீ இரட்டை ரயில் பாதை திட்டம், மதுரை – தூத்துக்குடி 160 கிமீ இரட்டை ரயில் பாதை, திருச்சி – மானாமதுரை- விருதுநகர், விருதுநகர் – தென்காசி, செங்கோட்டை- தென்காசி, திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில் பாதைகள் மின் மயமாக்கம் மற்றும் திருச்சி என்ஐடியில் ரூ.41 கோடியில் 1.2 லட்சம் சதுரடியில் 506 மாணவர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ விடுதி ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

மேலும்,  5 சாலைத் திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம் 2-ஐ நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.  ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான பெட்ரோலியம், இயற்கை எரிவாயு திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் திறக்கிறார்.

இந்த நிலையில்,  இன்று காலை 08.00 மணியளவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில்  திருச்சி புறப்பட்டு சென்றார். காலை 9 மணி அளவில்  திருச்சி விமான நிலையம் சென்றடைந்தார்.  தொடர்ந்து, காலை 10.10 மணிக்கு விமான நிலையத்தில் பிரதமரை முதலமைச்சர் வரவேற்கறார்.
பிரதமர் வருகையையொட்டி திருச்சியில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  திருச்சி விமான நிலையத்தில் இருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரையிலான 11 கிமீ தொலைவுக்கு சாலையின் இருபுறங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடையூறு ஏற்படாத வகையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும்,  திருச்சியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி விமானம் நிலையம் வழியாக செல்லும் அனைத்து கனரக வாகனங்களின் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் திருச்சி பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழகம் வரும் பிரதமர் மோடியை, விமான நிலையத்தில் வைத்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் சந்திப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி – பயணத்திட்டம் விவரம்…