தஞ்சை: மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன், அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று திருவாரூர் மாவட்டம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவிலும் பங்கேற்கிறார். அதற்காக இன்று காலை விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் தஞ்சாவூர் சென்றார். அவருக்கு வழிநெடுகிலும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 தஞ்சையில் மறைந்த முன்னாள் அமைச்சர் உபயதுல்லா  வீட்டுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு வைக்கப்பட்டிருந்த உபயதுல்லா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது, அவருடன் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.

தஞ்சாவூரைச் சேர்நத் திமுக முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா (வயது 83) கடந்த 19ந்தேதி காலமானார். திமுகவில் தஞ்சாவூா் நகரச் செயலராக 27 ஆண்டுகள் பணியாற்றிய  உபயதுல்லா, தஞ்சாவூா் சட்டப்பேரவை தொகுதியில் 1989, 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வென்றாா். 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை வணிகவரித் துறை அமைச்சராக இருந்தாா். மாநில வா்த்தக அணித் தலைவராகவும், தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.