சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்துள்ளார். ஆனால், ஓபிஎஸ் கலந்துகொண்டார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில்  நேற்று  மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசியல் தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு, தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அத்துடன் திமுக கூட்டணி கட்சி தலைவரான, காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி., த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், திமுக வின் தோழமை கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கற்றனர்.

ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளவில்லை.  ஆனால்,  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்தியநாதன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் பங்கேற்றார். எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.