சென்னை: மயிலாடுதுறை கள்ளச்சாராய கொலை குறித்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எந்த தவறுமே நடக்காதது போல் ‘பாதுகாப்பற்ற மாடல்’ அரசை நடத்தும் முதல்வர் ஆட்சியல் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார்.
‘பாதுகாப்பற்ற மாடல்’ (Unsafe Model) அரசை நடத்தும் தி.மு.க. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை என விமர்சனம் செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் ராஜ்குமார், மூவேந்தன், தங்கதுரை ஆகிய மூவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளி வந்த ராஜ்குமார் மீண்டும் சாராய விற்பனையை தொடங்கியுள்ளார். இதை அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் தட்டிக்கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுவனை ராஜ்குமார் தாக்கியுள்ளார். சிறுவன் தாக்கப்பட்டதைக் கண்ட ஹரிசக்தி என்ற கல்லூரி மாணவரும், ஹரிஷ் என்பவரும் சேர்ந்து ராஜ்குமாரை தட்டிக் கேட்டுள்ளனர். இதனையடுத்து, ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து இளைஞர்கள் இருவரையும் கத்தியால் குத்தியுள்ளனர். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மயிலாடுதுறை அருகே சாராய விற்பனையைத் தட்டிக் கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
எந்த தவறு குறித்து புகார் அளித்தாலும், புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதும் , கொல்லப்படுவதும் என, மக்களுக்கு முற்றிலும் ‘பாதுகாப்பற்ற மாடல்’ (Unsafe Model) அரசை நடத்தும் தி.மு.க. முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஆட்சியில் எந்த தவறுமே நடக்காதது போல், போட்டோஷூட், வீடியோஷூட் என வலம் வருவது தமிழ்நாட்டு அரசியலில் புதிய விந்தை.
ஸ்டாலினுக்கு போட்டோஷூட்டிற்கு அரிதாரம் பூசிக்கொள்வதில் இருக்கும் கவனம், தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதில் இருக்கும் ஆர்வம், என்றைக்காவது ஆட்சி நடத்துவதில் இருந்தது உண்டா? இதில், இவரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, இந்த கொலை வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக நடந்தது என பத்திரிகை செய்தி வெளியிடுகிறது. இளைஞர்கள் கொலையின் காரணத்தை தீர விசாரிப்பதுடன், தொடர்புள்ளோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன். விளம்பரங்களில் மட்டும் இருக்கும் கவனத்தை, மக்கள் பணியில் சிறிதாவது செலுத்துமாறு மு.க.ஸ்டாலினைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு? கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரு இளைஞர்கள் படுகொலை! இது மயிலாடுதுறை சம்பவம்….