சென்னை:  தலைமைச்செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திஷா கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்உள்பட பலர் பங்கேற்றனர்.

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க, மத்திய அரசு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முதலமைச்சரை தலைவராகக் கொண்டு திஷா கமிட்டி என்ற பெயரில் குழு அமைக்கப்பட்டது. மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்  நிறைவேற்றும் வகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் (பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்/நகராட்சி அமைப்புகள்) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து பிரதிநிதிகளிடையே சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக மாவட்ட மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் (DISHAs) உருவாக்கப்பட்டுள்ளன.

அதிமுகவில் எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக்குழு (திஷா கமிட்டி)  ஆலோசனை  கூட்டத்தில் கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தலைமைச்செயலகம்  நாமக்கல் கவிஞர் மாளிகையில்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறையின் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.  இந்தக் குழுவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசு துறையின் செயலாளர் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், சுப்பராயன், சு. வெங்கடேசன், டி.ஆர்.பாலு, மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, துரை வைகோ, தம்பிதுரை, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மௌலானா, செங்கோட்டையன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் இன்று முதலமைச்சரின் ஆலோசனைக் கூட்டத்தில்  பங்கேற்றுள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ( DISHA committee ) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் குழு உறுப்பினர்கள் தவிர  துறை சார்ந்த செயலாளர், அரசு சாரா தொண்டு நிறுவன பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.