சென்னை: கொரோனா தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வரும் 6ந்தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை செல்கிறார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு செய்து வருகிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி. இதுவரை சுமார் 25 மாவட்டங்களில் ஆய்வுகள் செய்த நிலையில், தற்போது மதுரையில் ஆய்வு செய்ய 6ந்தேதி அங்கு செல்கிறார்.
இதையடுத்து, மதுரை வரும் முதல்வரின் ஆய்வுக் கூட்டம் தொடர்பாக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், பெரியபுள்ளான், கூடுதல் கலெக்டர் பிரியங்கா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட அவசியமில்லை. ஒருவேளை தொற்று ஏற்பட்டுவிட்டால் அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும், விரைவில் குணமடைந்து விடலாம். உரிய வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தை (கோவிட் கேர் சென்டர்) பயன்படுத்திக் கொள்ளலாம். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் 21 கோவிட் கேர் சென்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
மதுரை மாவட்டத்தில் படுக்கை வசதிகளை பொறுத்தவரை அனைத்து அரசு மருத்துவமனைகளையும் சேர்த்து 1,937 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 591 படுக்கைகளும் மற்றும் கோவிட் கேர் சென்டர்களில் 4,000 படுக்கைகளும் தயார்நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.