மதுரை: தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதல் தடுப்பூசியை அரசு மருத்துவர் செந்தில் போட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று காலை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதையடுத்து மாநிலங்களிலும், தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கி உள்ளது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைத்தார்.
அதையடுத்து? தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கோவையில் 4, மதுரையில் 5, திருச்சி 5, சேலத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்தில் முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது. அதனை தொடர்ந்து முன்களப் பணியாளர்களான மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு ஒவ்வொரு மையங்களிலும் 100 பேருக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியவர், . கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படும் எனவும் முதல் தடுப்பூசிக்கு பிறகு 28 நாட்கள் கழித்து 2வது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.