சென்னை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் ரஞ்சித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்.  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் காரை பரிசாக வழங்கினர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அலங்காநல்லூரில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 17ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. போட்டியில் மொத்தம் 739 காளைகள் களமிறங்கின.

முன்பதிவு செய்திருந்த 688 மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்கி காளைகளை அடக்க முயன்றனர். சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் திறம்பட பிடித்தனர். அப்போது முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர்கள், சிறந்த காளைகள் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில் மாறநாடு குளமங்கலம் காளை முதலிடம் பிடித்தது. 2ம் இடம் புதுகை எஸ்ஐ அனுராதாவின் காளைக்கு கிடைத்தது. 3ம் பரிசு ஜிஆர் கார்த்திக்கின் காளைக்கும் வழங்கப்பட்டது.

ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் முதலிடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி அழகர்கோவில் கார்த்திக் 2வது இடமும், 13 காளைகளை அடக்கிய அரிடாப்பட்டி கணேசன் 3வது இடத்தையும் பெற்றனர்.

அவர்களில் முதலிடம் பிடித்த ரஞ்சித் குமாருக்கு ஒரு காரும், 4 கறவை மாடுகளும் பரிசாக அறிவிக்கப்பட்டன. கறவை மாடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன.

கார் பரிசு சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை தலைமை செயலகத்திற்கு ரஞ்சித் வரவழைக்கப்பட்டார். அவருக்கு காரை பரிசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் வழங்கி பாராட்டினர்.