சென்னை:
சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் கொண்டாடினார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

அறுவடை திருநாளான பொங்கல் திருநாள் இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும், உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் இன்று தை முதல் நாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு, கரும்பு, மஞ்சள், காய்கறிகள் உள்ளிட்டவற்றை சூரியனுக்கு படைத்து பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பொங்கி வரும் போது “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல்” என கூறி மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தங்கள் பாரம்பரிய வழக்கம் மாறாமல், வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதையடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திற்க்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேஷ்டி- சட்டை அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் கொண்டாடினார்.