சென்னை:
முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் உண்ணாவிரதம் இருக்க உரிமை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.
காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் அதிமுக போராட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் யாரும் எதிர்பார்க்காத நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இது அதிமுகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில, அரசியல் சாசன சட்டப்படி, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயலாகும் என்று, வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில், சுமோட்டோ வழக்கு தொடர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதை பரிசிலீத்த சென்னை உயர் நீதிமன்றம், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உரிமை இருக்கிறது என்று தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தை சுமோட்டோ வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் கூறினர்.