சென்னை: நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா கலைநிகழ்வில் கலந்துகொள்ள இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்றமுதல்  முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை   நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்வில் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட மத்திய மாநிலஅமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள், உலக செஸ் வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். சுமார் 900 பேர் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு கொரோனா மற்றும் குரங்கம்மை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் நடனக்கலைஞர்கள் என்று கூறப்படுகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,   சென்னை விமான நிலையத்துக்கு வரும் அனைவருக்கும் கொரோனா மற்றும் குரங்கு அம்மைபரிசோதனை கட்டாயம் செய்யப்படும். உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னரே, போட்டி அரங்கம் மற்றும் அரங்க வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். அனைத்துவகை மருத்துவ முறையிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சி அளிப்பதற்கான பயிற்சியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு மருத்துவர்களும் உள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் தங்களின்அவசர காலங்களில் மருத்துவர்களை தொடர்பு கொள்ள வசதியாக தகவல் புத்தகம் மேஜையில் வைக்கப்படும். மேலும், 2 ஆயிரம் வீரர்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.  வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக தமிழக அரசு சார்பில் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் வரும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் வசதிக்காக 5 பேருந்துகள் மற்றும் 25 ஆட்டோகள் நட்பு வாகனங்களாக சுற்றுலாத்துறை சார்பில் இயக்கப்படுகின்றன. இந்த நட்பு வாகனங்களில் இலவசமாக பயணிக்கலாம்.

சுற்றுலாத் துறை வடிவமைத்துள்ள ஆட்டோக்கள் மாமல்லபுரம் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இயக்கப்படும். ஆட்டோக்களில் குறைந்த கட்டணமே வசூலிக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.