சென்னை: கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுத்த நிலையில், வரும் 19ந்தேதி திமுக எம்.பி.க்கள், தமிழக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தமிழக தலைமைச்செயலாளர் உள்பட குழுவினர் பிரதமரை நேரில் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொள்ள நேரில் அழைப்பு விடுக்கின்றனர்.

‘கொரோனா தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஸ்டாலினுக்கு கொரோனா குணமான நிலையில், மேலும் சில நாள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் நேற்று அறிவித்தது. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் ஓரிருநாளில்  டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என தெரிகிறது. முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரை பிரதமர் மோடி, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அப்போது பிரதமரிடம் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், வரும் 19-ஆம் தேதி பிரதமரை நேரில் சந்தித்து, திமுக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன்  மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் அழைப்பு விடுக்க உள்ளனர்.