டெல்லி: சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க பன்னூர், பரந்தூர் ஆகிய 2 இடங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், பரந்தூர் தேர்வாகி இருப்பதாக பாராளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி என்விஎன் சோமு எழுப்பிய கேள்விக்கு மத்திய விமானத்துறை அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்துள்ளார்.

சென்னையில் மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. விமான சேவை அதிகரிப்பு காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், புதிய விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.  இதற்காக சென்னை அருகே பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் மத்திய அரசிடம் முன்மொழியப்பட்டன. இதை மத்திய விமானப் போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து,பல கட்ட சோதனைகளும் நடத்தினர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி டாக்டர்.கனிமொழி சோமு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த  மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இணையமைச்சர் வி.கே.சிங், சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பரந்தூர் என்ற இடத்தில், சென்னையின் 2ஆவது விமான நிலையம் அமைகிறது இந்த இடம் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.