சென்னை

நேற்று பகல் முதல் சென்னையில் பெய்து வரும் மழை அளவு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன.

நேற்று பகல் திடீரென சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது.  எதிர்பாராமல் பெய்த இந்த மழையால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர்.   அந்த மழை தொடர்ந்து பெய்தது.  நகரில் பல இடங்களில் இந்த ஒரு நாள் மழைக்கே சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

சென்னையில் சுரங்கப்பாதைகளில் நீர் அதிக அளவில் தேங்கியதால் 4 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.  போக்குவரத்து பாதிப்பு காரணமாக மக்கள் பெருந்துயர் அடைந்தனர்.  இதையொட்டி மெட்ரோ ரயில் சேவை நேற்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டது.  மழை நீர் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அதிகபட்சமாக சென்னை டிஜிபி அலுவலகம் (மெரினா) 24 சென்டி மீட்டர் மழை பதிவானது. அடுத்ததாக எம்.ஆர்.சி நகரில் 21.4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தவிர நுங்கம்பாக்கத்தில் 21 சென்டி மீட்டர் மழை , நந்தனம் 15 சென்டி மீட்டர் மழை,  மீனம்பாக்கத்தில் 13 சென்டி மீட்டர் மழை. அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளன.