சென்னை:

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததால் மன விரக்தியில் இருந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த வகையில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள், சேப்பாக்க வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் சிவச்சந்திரன் கூறுகையில், ‘‘பொதுவாக சென்னைப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் 6 மணிக்கு மேல் எந்தவிதப் போரட்டத்திற்கும் அனுமதி கிடையாது. ஆனால், அனிதாவின் இறப்புக்குப் பிறகு பதற்றமான சூழல் நிலவுவதால் மாலை நேரத்துக்கு பின்னரும் போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

இங்கேயே உட்கார்ந்து அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரியும் போராட அனுமதித்தால், தொய்வின்றி தொடருவோம். பல்கலைக்கழக நிர்வாகம் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டனர். அதை மறுத்துவிட்டோம். துணை வேந்தர் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. போலீசும் மோதல் போக்குடன் இதுவரை அணுகவில்லை’’ என்றார்.