தூத்துக்குடி

வெள்ளத்தால் நிறுத்தப்பட்டிருந்த சென்னை- தூத்துக்குடி விமானச் சேவை மீண்டும் தொடங்கி உள்ளது.

கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி நகர மற்றும் கிராமப்புறங்களில் மழை வெள்ள நீர் புகுந்தது.

இந்த கனமழையால் தூத்துக்குடி விமான நிலையத்தை வெள்ள நீர் சூழ்ந்து இதனால் விமான நிலையம் மூடப்பட்டது. கடந்த 3 நாட்களாகச் சென்னை – தூத்துக்குடி இடையேயான விமானச் சேவை பாதிக்கப்பட்டது.

தற்போது, தூத்துக்குடியில் மழை ஓய்ந்துள்ளதால் விமான நிலையத்தில் தேங்கிய நீர் அகற்றப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது. இன்று சென்னை – தூத்துக்குடி இடையேயான விமானச் சேவை 3 நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியுள்ளது.