சென்னை: தொடர் மழை காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகள் இன்னும் தண்ணீரில் மிதக்கும் நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால்,  சென்னையில் இன்று 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளதாகவும், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும்  போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதுபோல புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

சென்னையின்  தற்போதைய போக்குவரத்து குறித்து இன்று காவல்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி, மழை நீர் பெருக்கு காரணமாக வியாசர்பாடி சுரங்கப்பாதை , கணேஷபுரம் சுரங்கப்பாதை, அஜாக்ஸ் சுரங்கப்பாதை , மேட்லி சுரங்கப்பாதை ,அ ரங்கநாதன் சுரங்கப்பாதை , காக்கன் சுரங்கப்பாதை ஆகியவை மூடப்பட்டுள்ளது.

அத்துடன் ஈவிஎச் சாலை, கால்நடை மருத்துவமனை வேப்பேரி சாலை மசூதி, என்எல்சி , புரூக்லின் சாலை, கடற்கரை சேவை சாலை, சிவசாமி சாலை, வள்ளுவர் கோட்டம் பள்ளி சாலை, ஸ்டெர்லிங் ரோடு முதல் கல்லூரி வரை, டிடிகே ரோடு- எல்டாம்ஸ் ரோடு- தபால் காலனி, ராம் தியேட்டர் , பெரியார் பாதை, 100 அடி சாலை பல்லவா மருத்துவமனை , பசூல்லா சாலை , வாணி மஹால் ,அருணாச்சலம் சாலை, டி.ராஜன் ரோடு , காமராஜர் சாலை ,கற்பகா தோட்டம் ,விஜயநகர் ,முகமது சதக் கல்லூரி, விடுதலை நகர் கைவலி முதல் மடிப்பாக்கம் சதாசிவம் நகர், j 10  குளோபல் மருத்துவமனை ஆகிய சாலைகளில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதேபோல் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்தை தடை பெற்றுள்ள சாலையாக கேகே நகர் ராஜமன்னார் சாலை, மயிலாப்பூர் டாக்டர் சிவசாமி சாலை, செம்பியன் , பேரவெள்ளூர் 70 அடி சாலை, புளியந்தோப்பு வியாசர்பாடி முல்லை நகர் , பள்ளிகரணை 200 அடி சாலை, சென்னை கோட்டை ரயில் நிலையத்திலிருந்து தலைமை செயலகம் செல்லும் வழி அடைக்கப்பட்டு உள்ளது.

மழை நீர் பெருக்கு காரணமாக மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்ஆர்எச் சாலை செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பி நீரானது வெஜிடேரியன் வில்லேஜ் ரோடு வழியாக கால்வாயை அடைவதால், எம்ஆர்எச் சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலை துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் மூலம் சாலை ஒரு பக்கமாக மூடப்பட்டுள்ளது. 

வடபழனி முதல் கோயம்பேடு செல்லும் 100 அடி சாலையில் இலகுரக வாகனங்களுக்கு அனுமதியில்லை ,கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

மயிலாப்பூர் மடம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் கனரக வாகனங்கள் வழியாகவும், இலகுரக வாகனங்கள் மந்தைவெளி மார்க்கெட் செயின்ட் மேரி சாலை வழியாகவும் அனுப்பப்படுகிறது.

திருமலைப்பிள்ளை ரோடு காமராஜர் இல்லம் முன்பு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.  இதனால் வள்ளுவர் கோட்டம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாணி மஹால்- பென்ஸ் பார்க்  சந்திப்பில் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. 

வள்ளுவர் கோட்டத்திலிருந்து வாணி மஹால் செல்லும் வாகனங்கள் திருமலைப்பிள்ளை ரோட்டில் செல்லலாம்.

அதுபோல புறநகர் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரை மட்டும் இயக்கப்படும்  என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.  தொடர் மழை காரணமாகச் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- வேளச்சேரி  மார்க்கமாக இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சூலூர்பேட்டை அருகில் கலங்கி நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சூலூர்பேட்டை வரை இயக்கப்படும் புறநகர் ரயில்கள்  கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.