சென்னை: சென்னையில் ஓலா ஆட்டோ   குறைந்தபட்சம் ரூ.110 ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆட்டோ, கார் பயணம் செய்தால் குறைந்த பட்சம் ரூ. 100 -லிருந்து 150 வரை ஆகும்.  ஆனால் OLA, Uber போன்ற நிறுவனங்கள் தலையெடுத்த பிறகு, குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் 29 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ரூ.55 வசூலிக்கப்பட்டு வந்தது.  தொடர்ந்து கிலோ மீட்டருக்கு இவ்வளவு என்று நாம் செல்லும் தூரத்திற்கு ஏற்ப பணம் செலுத்த வேண்டும். இது சாதாரண ஆட்டோ கட்டணத்தை விட வெகு குறைவு என்பதால், மக்கள் ஓலா, உபேர் போன்ற ஆட்டோ டேக்சி சேவையை நாடி வருகின்றனர்.  சென்னையில் மட்டும் இதுபோன்று ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் ஓடுகின்றன. மேலும், இந்த சேவையை நமது வீட்டில் இருந்தே  பெற முடியும் என்பதால், மக்களிடையே  பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனால், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், எரிபொருள் விலை உயர்வு காரணமாக, ஓலா, உபேர் போன்ற டாக்கி, ஆட்டோ டிரைவர்களுக்கும் குறைந்தபட்ச வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், ஓலா ஆட்டோ மற்றும் கார்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.110 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.   தற்போது இந்த கட்டணம் ரூ.110 முதல் ரூ.130 வரை அதிகரித்து உள்ளது. பயணிகள் வசதி கட்டணமாக 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.35 வசூலிக்கப்படுகிறது. ஓலா கார், ஆட்டோக்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.