சென்னை: மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு  ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது  ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, சென்னை பசுமை வழிசாலையில் இருந்து அடையாறு சந்திப்பு வரை ஆற்றில் சுரங்கம் தோண்டப்படுகிறது. அடையாறு ஆற்றில் மிதவை படகில் இயந்திரம் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 2 வழித்தடங்களில் சுமார் 55 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தொடர்ந்து 2-வது கட்டமாக ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தின் ஒரு பகுதியாக,  மெரினா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கி.மீ. வரை 3-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சோழிங்க நல்லூர் வரை 47 கி.மீ. வரை 4-வது வழிப்பாதையிலும், மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரை 48 கி.மீ. தூரத்திற்கு 5-வது வழிப்பாதை உள்பட 3 வழிப்பாதைகளில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகிறது.

இதில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான மெட்ரோ ரயில் பாதை அடையாறு ஆற்றின் கீழே சுரங்கம் மூலமாக பயணிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பசுமைவழிசாலையில் மெட்ரோ ரயில் நிலையம் அமையவுள்ள பகுதியில் சுரங்க ரயில் நிலையத்திற்கான சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல் அடையாறு ஆற்றில் 6 மீ அளவிற்கு தண்ணீர் இருப்பதால் மிதவை படகில் எந்திரங்கள் பொருத்தி 40 மீட்டர் ஆழத்திற்கு துளைகள் போடப்பட்டு மண் பரிசோதனை செய்யும் பணி முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுரங்கம் தோண்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுரங்கப்பாதை அமைப்பதற்காக 2 சுரங்கம் தோண்டும் எந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் எந்திரங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், டிசம்பர் 15ந்தேதி தொடங்க இருந்த சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அடையாறு ஆற்றின் கீழே மெட்ரோ ரயிலுக்கான சுரங்க பாதை தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடக்கம்!