சென்னை: ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, இன்றும், நாளையும் என இரு நாட்கள்  6 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது மெட்ரோ ரயில். இதற்கு சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.  இதனால் தினசரி பல லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை உள்ளதால், ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் செல்வார்கள். இதற்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இன்றுமுதல் இயக்கும் நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகமும், பயணிகளின் வசதிக்காக கூடுதல் சேவைகளை அறிவித்து உள்ளது.

அதன்படி, , இன்றும், நாளையும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஞாயிற்று கிழமை (அக்டோபர் 22), ஆயுத பூஜை (அக்டோர் 23), சரஸ்வதி பூஜை (அக்டோபர் 24) என தொடர் விடுமுறை வருகிறது. இதனால், சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று (அக்டோபர் 20) மற்றும் நாளை (அக்டோபர் 21) ஆகிய நாட்களில் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை கூடுதல் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது.

அதாவது, இரவு 8 மணி முதல் 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்கு பதிலாக 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.